Home 13வது பொதுத் தேர்தல் அடுத்த ஆட்சியமைக்க சரவாக்கை மையம் கொள்ளும் கூட்டணிகள்

அடுத்த ஆட்சியமைக்க சரவாக்கை மையம் கொள்ளும் கூட்டணிகள்

577
0
SHARE
Ad

Map - Malaysia (Sarawak)

கோலாலம்பூர், மார்ச் 26 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் சரவாக் மாநிலத்தில் அதிக நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றுவதில் தேசிய முன்னணிக்கும், மக்கள் கூட்டணிக்குமிடையே பலத்த போட்டி நிலவுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் 31 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சரவாக் மாநிலத்தை கைப்பற்றுவதன் மூலம் புத்ரா ஜெயாவை அடையலாம் என்ற இலக்கோடு இரு கூட்டணிகளும் கடுமையாகப் போராடி வருகின்றன.

#TamilSchoolmychoice

கடந்த 2008 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி சரவாக் மாநிலத்தின் 30  நாடாளுமன்ற தொகுதிகளையும் வென்று, மத்தியில் ஆட்சியமைத்தது.

ஆனால் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியின் வாக்குகள் சரியத்தொடங்கின. இதன் மூலம் சரவாக் மாநிலத்தில் மக்கள் கூட்டணியின் செல்வாக்கு உயரத் தொடங்கியதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணரத் தொடங்கின.

இந்நிலையில், சரவாக் மாநிலத்தில் சீன வாக்குகள் அதிகமுள்ள தொகுதிகளான ஸ்டாம்பின், சாரிகேய்,லனாங் மற்றும் மிரி ஆகிய தொகுதிகளில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளால், அந்த தொகுதியிலுள்ள சீன வாக்குகள் அனைத்தும் இந்த தேர்தலில் மக்கள் கூட்டணியின் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இதன் மூலம் மக்கள் கூட்டணி, கடந்த 2008 ஆம் ஆண்டுத் தேர்தலில் வென்ற ஒரே ஒரு தொகுதியான பண்டார் கூச்சிங்குடன் சேர்ந்து சீன வாக்குகள் அதிகமுள்ள இந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர கடந்த 2010ஆம் ஆண்டில் நடந்த இடைத் தேர்தலில் சிபு நாடாளுமன்ற தொகுதியை 398 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றிய ஜசெக மீண்டும் இந்த சிபு தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் ஆட்சியமைக்க இந்த மாற்றம் போதுமா?

கடந்த தேர்தலில் தாங்கள் வென்ற அனைத்துத் தொகுதிகளையும் இம்முறையும் தக்க வைக்கும் முயற்சியில் தேசிய முன்னணி இறங்கியுள்ளது. அதேவேளையில் மக்கள் கூட்டணி குறைந்தது 9 தொகுதிகளையாவது கைப்பற்றிவிடும் இலக்கோடு களமிறங்குகிறது.

இருப்பினும் தேர்தல் சமயத்தில் நிகழும் முறைகேடுகள், போலி வாக்காளர்கள், தேர்தல் பிரச்சாரங்கள், வேட்பாளர்கள் தேர்வு போன்ற பல பிரச்சனைகளைச் சமாளித்து தேசிய முன்னணிக்கு இணையாக மக்கள் கூட்டணியால் செயல்படமுடியுமா என்பதைப் பொறுத்துத் தான் வெற்றி வாய்ப்புகள் அமையும்.

மேலும் சரவாக் மாநிலத்தில் மக்கள் கூட்டணி தங்களின் இலக்கான 9 தொகுதிகளை வென்றால் கூட, மத்தியில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாது.காரணம் தேசிய முன்னணி அரசின் கோட்டை என்று அழைக்கப்படும் மாநிலங்களான ஜோகூர்,சபா மற்றும் பகாங் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டணி பெரும்பான்மையான இடங்களை பிடிப்பது கடினம்.

எனவே மக்கள் கூட்டணி கட்சி, கடந்த தேர்தலில் தாங்கள் வென்ற 82 தொகுதிகளை இம்முறையும்  தக்க வைப்பதோடு, மேலும் 30 தொகுதிகளை வென்றால் மட்டுமே மத்திய அரசாங்கத்தை குறுகிய பெரும்பான்மையில் அமைக்க முடியும்.

ஆகவே சபா,சரவாக், ஜோகூர், மற்றும் பகாங் ஆகிய நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் தான் மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார் – தேசிய முன்னணியா அல்லது மக்கள் கூட்டணியா என்பதை முடிவு செய்யப்போகிறது.