Home நாடு டிஎல்பி – இருமொழித் திட்டம் கைவிடப்பட்டதா?

டிஎல்பி – இருமொழித் திட்டம் கைவிடப்பட்டதா?

1197
0
SHARE
Ad

DLP-PROTEST-PUTRAJAYA-19052017 (2)கோலாலம்பூர் – கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை பள்ளிகளில் மலாய் மொழி அல்லது ஆங்கிலம் என இருமொழிகளில் மாணவர்கள் படிக்க வகை செய்யும் இருமொழிப் பாடத்திட்டம் (Dual Language Programme -DLP) இந்த ஆண்டு முதல் கல்வி அமைச்சால் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தத் திட்டம் தொடங்கிய முதலே தமிழ், சீனப் பள்ளிகளின் தரப்புகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் எழுந்து வந்தன. பல இந்திய சமூக அமைப்புகளும், தமிழ் ஆர்வலர் குழுக்களும் இந்த இருமொழித் திட்டத்திற்கு எதிராக எதிர்ப்புகளை முன்வைத்தன.

கல்வி அமைச்சின் மாநில இலாகா ஒன்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக ஆங்கில இணைய ஊடகமான ‘ஸ்டார் ஒன்லைன்’ தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக ஏற்கனவே இருமொழித் திட்டம் அமுலாக்கப்பட்டிருக்கும் பள்ளிகளின் நிலைமை இனி என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனினும் இதுவரையில் கல்வி அமைச்சிடம் இருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இந்தத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதா அல்லது முழுமையாக இரத்து செய்யப்பட்டிருக்கிறதா என்ற குழப்பமும் நிலவுகின்றது.

DLP-PRESS MEET-MAY 19
கடந்த காலத்தில் வெளியிடப்பட்ட இருமொழித் திட்டத்திற்கான எதிர்ப்பு அறிவிப்புகளில் ஒன்று

தமிழ்ப் பள்ளிகளைப் பொறுத்தவரை இருமொழித் திட்டம் மீதான ஆதரவு – எதிர்ப்பு என இந்திய சமுதாயத்தில் பிளவுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

மாறி வரும் நவீன உலகில் கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களை மாணவர்கள் ஆங்கிலத்தில் படிப்பதால் அவர்களின் எதிர்கால கல்வியறிவு இடைநிலை மற்றும் பல்கலைக் கழகங்களுக்குச் செல்லும்போது மேம்படும் என இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் கூறுகின்றனர்.

ஆனால், தமிழ்ப் பள்ளிகளின் அடிப்படை நோக்கத்தையும், இந்நாட்டில் தமிழ்ப் பள்ளிகளையும், தமிழ் மொழிக் கல்வியையும் நிலைநிறுத்தும் அடிப்படை நோக்கத்தையே இத்திட்டம் சிதைத்துவிடும் என்றும், இருமொழிகளில் படிப்பதால் மாணவர்களுக்கு குழப்பமே ஏற்படும் என்றும் இத்திட்டத்திற்கு எதிரானவர்கள் வாதங்களை முன்வைக்கின்றனர்.

இருமொழித் திட்டத்தின் பின்னணி

டிஎல்பி எனப்படும் இருமொழித் திட்டத்தை 2016 வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தபோது பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்தார். முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 300 பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகம் கண்டது.

முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, படிவம் ஒன்று மற்றும் படிவம் இரண்டு மாணவர்களுக்கு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டன.

2017 நவம்பரில் கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி இருமொழித் திட்ட அமுலாக்கத்தால் சுமார் 1,200 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் மாணவர்களிடையே கணிசமான அளவில் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது என அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக 47 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பல இந்திய சமூக இயக்கங்களைச் சேர்ந்த கூட்டமைப்பு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கல்வி அமைச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில்தான் 2018-ஆம் ஆண்டில் இருமொழித் திட்டம் தொடரப்படுமா? ஒத்தி வைக்கப்படுமா? அல்லது முழுமையாக இரத்து செய்யபடுமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.