தானா ராத்தா (கேமரன் மலை) – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் கடுமையான போட்டியைக் காணப் போகும் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுவது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி.
மஇகாவின் பாரம்பரியத் தொகுதியாகக் கருதப்படும் கேமரன் மலையில் மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு அங்கு தீவிரமாகக் களப்பணி ஆற்றி வருகிறார்.
அதே வேளையில், இங்கு வழக்கமாகப் போட்டியிட்டு வரும் ஜசெக, தனது சார்பில் வழக்கறிஞர் மனோகரனை அங்கு அனுப்பி வைத்து தேர்தல் முன்னேற்பாடுகளை கவனிக்கச் சொல்ல, அவரும் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், வாக்காளர்களைச் சந்தித்துக் கொண்டும் வருகிறார்.
இவர்களுக்கிடையில், கேமரன் மலை எங்களுக்குத்தான் ஒதுக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து வரும் மைபிபிபியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், அத்துடல் நில்லாமல் தொடர்ந்து கேமரன் மலையில் முகாமிட்டு, வாக்காளர்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பிஎஸ்எம் எனப்படும் மலேசிய சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் சுரேஷ் என்ற உள்ளூர் வேட்பாளரும் தனது கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்து தொடர்ந்து பத்திரிக்கை அறிக்கைகளும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (5 ஜனவரி 2017) கேமரன் மலை தானா ரத்தா பகுதியில் திறப்பு விழா கண்டது ஸ்கோட்ஸ் கபே (Scott ‘s cafe) என்ற உணவகம். இந்த உணவகத் திறப்பு விழாவில் அந்தத் தொகுதியில் எதிரும் புதிருமாக பிரச்சாரம் செய்து வரும் மஇகாவின் சிவராஜூம், ஜசெகவின் மனோகரனும் நேரில் கலந்து கொண்டனர்.
அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து இருவரும் இந்த உணவகத் திறப்பு விழாவில் கலந்து அளவளாவிக் கொண்டதோடு இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.