Home நாடு “என்னை ஏற்றுக்கொள்வது அன்வாருக்கு அவ்வளவு எளிதல்ல” – மகாதீர் உருக்கம்

“என்னை ஏற்றுக்கொள்வது அன்வாருக்கு அவ்வளவு எளிதல்ல” – மகாதீர் உருக்கம்

854
0
SHARE
Ad

Mahathir‌ஷா ஆலம் – நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஷா ஆலமில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் மாநாட்டில், 14-வது பொதுத்தேர்தலில் எதிர்கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், துணைப் பிரதமர் வேட்பாளராக டத்தின்ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயிலும் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இம்மாநாட்டில் உரையாற்றிய மகாதீர், 14-வது பொதுத்தேர்தலில் தன்னுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

“பழைய சம்பவங்கள் காரணமாக, அரசியல் கூட்டணியில் அன்வார் என்னை ஏற்றுக் கொள்ளும் முடிவை எடுப்பது அவ்வளவு எளிது அல்ல” என்று மகாதீர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், 90 களில் அன்வார் சிறைக்குச் சென்ற போது, அன்வாரின் குடும்பத்தினரை அது மிகவும் பாதித்தது என்பதை மகாதீர் ஒப்புக் கொண்டார்.

“அவர்கள் 20 ஆண்டுகள் கஷ்டப்பட்டார்கள். எனவே அச்சம்பவத்தை அவர்கள் மறப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த நாட்டை காப்பாற்றுவதற்காக என்னுடனும் என் அணியுடனும் ஒத்துழைக்க விரும்பிய அன்வருக்கு நான் கடன்பட்டுள்ளேன்” என்றும் மகாதீர் கூறினார்.

கடந்த 1998-ம் ஆண்டு, மகாதீர் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில், அப்போது துணைப்பிரதமராக இருந்த அன்வாரை, மகாதீர் பதவியிலிருந்து நீக்கினார்.

அதோடு, தன் மீதான பாலியல் வழக்கு விசாரணையில் காவல்துறை விசாரணையில் தலையிட்டதாக, அன்வார் மீது ஊழல் புகாரும் சுமத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.