கோலாலம்பூர் – ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனத்தைச் சேர்ந்த பங்குதாரர்கள், ஏர் ஆசியா குழுமம் பெர்ஹாட்டாக மறுசீரமைக்க சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் தகவலில், ஏர் ஆசியாவைச் சேர்ந்த 99.9999 விழுக்காடு பங்குதாரர்கள், ஏர் ஆசியா குழுமம் பெர்ஹாட்டாக மாற்ற சம்மதம் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனையடுத்து, ஏர் ஆசியா நிறுவனத்தின், இஜிஎம்-ல் (Extraordinary general meeting) இந்தப் புதிய உள் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு பங்குதாரர்களிடம் அதிகாரப்பூர்வ அனுமதி பெறவிருக்கிறது.
இப்புதிய திட்டத்தின் படி, ஏர் ஆசியா பெர்ஹாட்டில் உள்ள 3.34 பில்லியன் சாதாரண பங்குகளை, ஏர் ஆசியா குழுமத்தில், ஒரு ஏர் ஆசியா பெர்ஹாட் பங்கிற்கு ஒரு ஏர் ஆசியா குழுமப் பங்கு வீதம் பரிமாற்றம் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.