Home நாடு எம்எச்370: மலேசியாவுக்கு அமெரிக்க நிறுவனம் அளித்திருக்கும் புதிய நம்பிக்கை!

எம்எச்370: மலேசியாவுக்கு அமெரிக்க நிறுவனம் அளித்திருக்கும் புதிய நம்பிக்கை!

1056
0
SHARE
Ad

mh370கோலாலம்பூர் – 2018, மார்ச் 8-ம் தேதி வந்தால், மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370, மாயமாகி சரியாக 4 ஆண்டுகள் ஆகின்றது.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகள், பல கோடி டாலர்கள் செலவு செய்து, இந்தியப் பெருங்கடல் வரைத்  ஆழ்கடல் தேடல் வேட்டை நடத்திய பிறகும், விமானத்தின் பாகங்கள் கிடைக்காததால், மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா என மூன்று நாடுகளும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேடுதல் பணிகளை நிறுத்திக் கொண்டன.

என்றாலும், 227 பயணிகள், 12 பணியாளர்களுடன் மாயமான அந்த விமானத்திற்கு என்ன தான் நேர்ந்தது? இதுவரை கரை ஒதுங்கிய சிறிய பாகத்தைத் தவிர மற்ற பாகங்கள் எங்கே? போன்ற பல கேள்விகள் இன்னும் கேள்களாகவும், யூகங்களாகவும் மட்டுமே இருந்து வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம், மலேசியாவிற்கு தற்போது புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.

ஓசன் இன்ஃபினிட்டி என்ற தனியார் நிறுவனம் ஒன்று எம்எச்370 விமானத்தைத் தாங்கள் கண்டறிவதாக மலேசியாவிடம் கோரிக்கை விடுத்தது.

ஆனால், இந்தத் தேடுதல் பணிக்காக மலேசியா முதலில் எந்த ஒரு நிதியையும் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முற்றிலும் அந்நிறுவனமே செலவு செய்து இந்தத் தேடுதல் பணியை மேற்கொள்கிறது.

மலேசியாவுடன் அந்நிறுவனம் செய்திருக்கும் ஒப்பந்தத்தின் படி, எம்எச்370 பாகங்களைக் கண்டறிந்தால் மட்டுமே பணம், அப்படி கண்டறிய முடியவில்லை என்றால் மலேசியா பணம் கொடுக்கத் தேவையில்லை.

இதற்கு மலேசிய அரசும் ஒப்புக் கொண்டு அனுமதியளித்துவிட்டதாக மலேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோ லியாவ் தியாங் லாய் கடந்த வாரம் அறிவித்தார்.

இதனையடுத்து, ஓசன் இன்ஃபினிட்டி நிறுவனம் ஆஸ்திரேலியக் கடற்பகுதியில் சுமார் 25,000 சதுர கிலோமிட்டர் பரப்பளவில் தேடுதல் பணிகளை நடத்தத் தயாராகிவிட்டது.