பொங்கலை முன்னிட்டு டாக்டர் சுப்ரா வழங்கியிருக்கும் வாழ்த்து செய்தி பின்வருமாறு;
“உழவுத் தொழிலுக்கு வந்தனம் செய்வோம்” என உழைப்பிற்கு உயர்வு தேடித் தரும் உழவுத் தொழிலைப் போற்றும் விழாவாக பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. இந்நன்னாளில் உணவு படைக்கும் உழவர்களுக்கு உரிய மரியாதையையும் நன்றியையும் செலுத்தும் பொருட்டு பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாளாகவும் தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு சிறப்புற அமைந்த பொங்கல் பண்டிகையைத் தமிழர் திருநாளாகவும் கொண்டாடி வருவதும் ஒரு மரபு.
பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகிப் பண்டிகையில் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வலு வலு கால வகையினானே” எனும் முதுமொழிக்கேற்ப பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் நம்மிடையே காலம் காலமாக இருந்து வருகின்றது. ஆனால், அது வெறும் பொருட்களை மட்டும் எரிப்பதோடு நின்று விடாது, காலத்திற்கு உதவாத, பயன்படாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் தவிர்த்து, காலத்திற்கேற்ப மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் வகையில், பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொண்டு சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதனை நம் சமுதாயம் தெளிந்து உணர வேண்டிய நேரமிது. நம் சமுதாயத்தின் எதிர்கால நலனையும் தேவைகளையும் அவசியங்களையும் முன்னிறுத்தி தெளிவான சிந்தனையுடன் கூடிய முடிவுகளை எடுக்கும் நேரமிது.
உலகெங்கும் வாழும் பெருமக்கள் அனைவரும் உவகையுடன் கொண்டாடும் இந்த பொங்கல் திருநாள் வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடி மகிழ வேண்டும். ‘இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்; இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்’ எனக்கூறி எனது மனமார்ந்த பொங்கல் & மகர சங்கராந்தி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உளமார தெரிவித்துக் கொள்கிறேன்.”