முதலில் இது ஒரு மலையாளப் படத்தின் மறு உருவாக்கம் என்பதை மறந்து, அந்தப் படத்துடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலையைத் தவிர்த்து, ஒரு புதியத் தமிழ்த் திரைப்படம் பார்க்கப் போகிறோம் என்ற மனநிலையோடு செல்லும் போது மட்டுமே இத்திரைப்படத்தின் அழகியலை ரசிக்க முடியும்.
அதுமட்டுமின்றி, இத்திரைப்படத்தை ரசிக்க ஒரு மன அமைதி வேண்டும். வேறு ஒரு படத்திற்கு டிக்கெட் கேட்டு கிடைக்காமல் வேறு வழியின்றி ‘நிமிர்’ படத்தில் போய் உட்கார்ந்தால் நிமிர முடியாத அளவிற்கு அவஸ்தை தான்.
கதைச்சுருக்கம்
அந்த ஊரில் நடக்கும் இன்ப, துன்ப நிகழ்வுகளுக்கு உதயநிதி தான் புகைப்படக் கலைஞர். இப்படியிருக்க அதே ஊரில் தன்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த பார்வதி நாயரைக் காதலிக்கிறார். பார்வதிக்கும் உதயநிதி மேல் காதல் இருக்கிறது.
ஆனால், வீட்டிற்கு பயந்து அப்பா, அம்மா சொல்லும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்கிறார் பார்வதி. காதலில் தோற்ற உதயநிதி, ஒரு தகராறில் அந்த ஊரின் ரௌடியான சமுத்திரக்கனியிடமும் அடி வாங்குகிறார்.
உதயநிதி சமுத்திரக்கனியைத் திருப்பி அடித்தாரா? பார்வதி திருமண வாழ்க்கை என்ன ஆயிற்று? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் படத்தின் கிளைமாக்ஸ்.
ரசிக்க
திகிலும், திருப்பங்களும் நிறைந்த ஆஹா ஓஹோ கதையெல்லாம் கிடையாது என்றாலும் நமது பக்கத்துவீட்டில் நடப்பது போன்ற மிக எதார்த்தமான மனநிலையைக் கொடுப்பது தான் இத்திரைப்படத்தின் மிகப் பெரிய பலம்.
ஓடும் நதி, பச்சைப்பசேல் புல்வெளிகள், ஓட்டு வீடுகள், மரங்களின் வரிசை, ஒத்தையடிப் பாதை என ஒவ்வொரு பிரேமும் அவ்வளவு அழகு. நிச்சயமாக ஒளிப்பதிவிற்காகவே இத்திரைப்படத்தை ரசிக்கலாம்.
அதற்கேற்ப தர்புகா சிவா, அஜனீஸ், ரோனியின் இசையும், பாடல்களும் கதையோட்டத்திற்கு மிக இனிமையாக இருக்கின்றன. ஆனால் மனதில் நிற்கவில்லை.
மகேந்திரனும், உதயநிதியும் ஒன்றாக வரும் காட்சிகள் அனைத்தும் கவிதையாகத் தெரிகின்றன. நீண்ட வசனமெல்லாம் கிடையாது. ஆனால் உணர்வுகளை அள்ளித் தெளிக்கின்றது.
உதாரணமாக, தனது தந்தை மகேந்திரன் எடுக்க பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை எடுக்கிறார் உதயநிதி.
மகேந்திரன்: அங்க என்ன பண்ணிட்டு இருக்க?
உதயநிதி: இல்ல.. இதுல கொஞ்சம் கலர் டச்சப் பண்ணி டிஜிட்டல் பண்ணா சூப்பரா இருக்கும்.
மகேந்திரன்: எதையாவது தொட்டா கை ஒடச்சிடுவேன்.
இப்படியாக, தந்தை, மகனுக்குள்ளாக இருக்கும் அன்பும், அக்கறையும் ரசனை.
பார்வதி, நமிதா பிரமோத், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், சமுத்திரக்கனி, அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பும் அழகு.
யாருக்கான படம்?
எனவே, கொண்டாட்ட மனநிலையோடு செல்லும் ரசிகர்களுக்கு படத்தின் தன்மை நிச்சயமாக மகிழ்ச்சியைத் தராது.
மற்றபடி, குடும்பத்தோடு சென்று பார்க்க, ஆபாசமில்லாத, அறுவெறுப்பில்லாத, வெட்டுக் குத்து இரத்தம் இல்லாத ஒரு அழகான திரைப்படம்.
-ஃபீனிக்ஸ்தாசன்