கோலாலம்பூர் – தைப்பூசத்தை முன்னிட்டு மைபிபிபி தேசிய இளைஞர் பிரிவின் சமுதாய நடவடிக்கையான ‘இலவச கழிப்பறை வசதி’ திட்டம் 3-ஆவது ஆண்டாகத் தொடர்கின்றது. இந்தத் திட்டத்தின் வழி, நாடளாவிய நிலையில் 2 லட்சம் பக்தர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது என மைபிபிபி தேசிய இளைஞர் பிரிவு தலைவர் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.
இரத ஊர்வலம் செல்லும் வழி நெடுகிலும் தண்ணீர் பந்தல்கள் பக்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் வேளையில், பக்தர்களின் அவசரத் தேவைக்காக கழிப்பறைகள் அந்த இரவு வேளையில் கிடைப்பதில்லை. பக்தர்களில் சிலர் மூத்த குடிமக்களாகவும் உடல்நலக் குறைவுடையவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் கழிப்பறைகளைத் தேடுவதில் அவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக இரத ஊர்வலப் பாதையில் நடமாடும் கழிப்பறைகளை மைபிபிபி தேசிய இளைஞர் பிரிவு கடந்த 2016-ஆம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்தது. இத்திட்டத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால், மூன்றாவது ஆண்டாக இத்திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது.
கடந்த முறை மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் 5 இடங்களில் இச்சேவை வழங்கப்பட்டது. இம்முறை இச்சேவை 7 முதன்மை இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தைப்பூசம் களைகட்டும் பகுதிகளான:
- துன் எச்.எஸ். லீ, மாரியம்மன் கோயிலிலிருந்து பத்துமலை முருகன் கோயில் (ஜன. 29) வரை
- பத்துமலை முருகன் கோயில் (ஜன. 29 – ஜன.31)
- பண்டார் ஈப்போவிலிருந்து ஈப்போ, கல்லுமலை முருகன் கோயில் (ஜன.29) வரை
- பினாங்கு பண்டாரிலிருந்து பினாங்கு, அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில் (ஜன. 29) வரை
- கேமரன்மலை, தானாராத்தா முருகன் கோயில் (ஜன. 29 – ஜன.31)
- கோலசிலாங்கூர் முருகன் கோயில் (ஜன. 29 – ஜன. 31)
- ஜோகூர்பாரு, தம்போய், முனீஸ்வரர் கோயில் (ஜன. 29 – ஜன. 31)
போன்ற இடங்களில் இலவச கழிப்பறை சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.
மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது சத்தியா சுதாகரன் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
‘இகோவெஸ்ட் பெர்ஹாட்’ நிறுவனத்தின் ஒத்துழைப்பில் இம்முறை 300 கழிப்பறைகள் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்படவுள்ளன. இந்தக் கழிப்பறைகளை 1 அல்லது 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தப்படுத்தி, பக்தர்களுக்கு தூய்மையான சேவையை வழங்க மைபிபிபி இளைஞர் அணி செயல்திறனுடன் களமிறங்கியுள்ளது.
இதனிடையே, வரும் ஜனவரி 29ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு ஜாலான் ராஜா லாவுட்டில், மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார். இந்நிகழ்வில் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் அவர்களும் கலந்து கொள்வார் எனவும் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.