
ரியாட் – அனைத்துலக அளவில் பல்வேறு முதலீடுகளைக் கொண்டிருக்கும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வாலிட் பின் தலால் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
சவுதி நாட்டில் ஊழல்களை ஒழிப்பதாகக் கூறி பல அரச குடும்ப உறுப்பினர்களையும், அரசாங்க அதிகாரிகளையும் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவை சவுதியின் பட்டத்து இளவரசர் சல்மான் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர் அல்வாலிட் தலால். காரணம், சவுதியின் மிகவும் சக்திவாய்ந்த வணிகப் பிரமுகர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் அவர்.
அனைத்துலக அளவில் பல நாடுகளில் அவரது நிறுவனம் முதலீடுகளைக் கொண்டிருந்தது.
ரியாட்டில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர விடுதியான ரிட்ஸ்-கார்ல்டன் தங்கும் விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அல்வாலிட் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீட்டுக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களின் ஊழல் சொத்துகளில் இருந்து கணிசமான விழுக்காட்டை அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைத்தால், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் பட்டத்து இளவரசர் சல்மான் கூறியதாக ஊடகங்கள் அண்மையில் தெரிவித்திருந்தன.
இந்த சூழ்நிலையில் இளவரசர் அல்வாலிட் இல்லம் திரும்பியிருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்தது. எனினும் எந்த உடன்பாட்டின் அடிப்படையில் அல்வாலிட் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.