இவர்களெல்லாம் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னிகளாக, பாலிவுட்-இந்தித் திரையுலகத்தில் கவர்ச்சிக் கதாநாயகிகளாக – உலா வந்தவர்கள்!
கால ஓட்டத்தில் திருமணம் முடிந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பின்னரும் – இன்னும் ஒரு சிலர் – இன்றைய இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரின் இளமைக்கால நினைவுகளையும் கிளறி விடுபவர்களாக இருக்கிறார்கள்.
உடற்பயிற்சி, அளவான உணவுப் பழக்கங்கள், யோகா எனத் தங்களின் கட்டுடலைக் காப்பாற்றி, அதனை எடுத்துக் காட்டும் விதமாக அடிக்கடி இன்ஸ்டாகிராம் இணையத் தளங்களில் தங்களின் புகைப்படங்களை பதிவேற்றி சினிமா இரசிகர்களுக்கு தங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
அவ்வப்போது சில படங்களில் நடிக்கவும் செய்கிறார்கள்.
அவர்களில் சிலரை இங்கே பார்ப்போமா?
ஐஸ்வர்யா ராய் பச்சான்

அண்மையில் வெளிவந்த “ஹே டில் ஹாய் முஷ்கில்” (Ae Dil Hai Mushkil” படத்தில் இளம் நடிகர் ரண்பீர் கபூருடன் கவர்ச்சி தளும்ப நெருக்கமாக நடித்து, இரசிகர்களைக் கிறங்கடித்தார், ஐஸ்வர்யா ராய். இன்னொரு புறத்தில் உலகப் பட விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும், புகைப்படக்காரர்கள் மொய்க்கும் அளவுக்கு கவர்ச்சி ஆடைகளில் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தனது தாய்மையை மக்களுக்கு நினைவுபடுத்தும் வண்ணம், மகளுடன் அடிக்கடி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமிலும் பதிவிடுகிறார். யாரைக் கேட்டாலும் பாலிவுட்டின் நம்பர் #1 நடிகை யார் எனக் கேட்டால் இன்றைக்கும் அது ஐஸ்வர்யாதான்!
மாதுரி டிக்சிட்

ஐஸ்வர்யாவுக்கு முன்பாக இந்தித் திரையுலகை தனது அழகாலும், நடன அசைவுகளாலும் ஆட்டி வைத்தவர் மாதுரி டிக்சிட். அமெரிக்க மருத்துவரைத் திருமணம் புரிந்து கொண்டு அமெரிக்கா சென்று, இரண்டு குழந்தைகளோடு, தங்கிவிட்டார்.
ஆனாலும், விடவில்லை பாலிவுட். இதோ! வரிசையாகப் படங்கள்! 50-ஐ நெருங்கும் வயதிலும் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்குபவருக்கு இன்னும் புதிய இளம் இரசிகர்களின் ஆதரவு குறையவில்லை. பழைய இரசிகர்களின் கைத்தட்டல்களும் ஓயவில்லை.
எப்படி நடனம் ஆடுவது என்று தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் கவர்ச்சி உடையுடன் வகுப்புகளும் எடுக்கிறார் மாதுரி.
பிரித்தி ஜிந்தா

‘நெஞ்சினிலே…நெஞ்சினிலே’ என்ற நம்மூர் எஸ்.ஜானகி தமிழிலும் இந்தியிலும் பாடிய பாடலுக்கு மணிரத்னத்தின் ‘தில் சே’ (தமிழில் உயிரே) படத்தில் ஷாருக்கானுடன் ஆடி, இரசிகர்களின் நெஞ்சங்களில் புயலென நுழைந்தவர் பிரித்தி ஜிந்தா – இன்னும் அங்கேயே குடியிருக்கிறார். ஆனாலும் திருமணமாகிவிட்டது.
படவுலகை விட்டு விலகினாலும் இந்திய ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் உரிமையாளரான அம்மணியின் முக தரிசனம் அவ்வப்போது காணவும் – அவரது “கட்டிப்பிடி விளையாட்டாளர்களை” காட்சிகளைக் காணவும் இரசிகர் கூட்டம் ஒன்று இன்னும் ஏங்கிக் கிடக்கிறது. அண்மையில் வைரலாக – இணையம் எங்கும் பகிரப்பட்டது, ஐபிஎல் விளையாட்டாளர்களுக்கான ஏலத்தின் போது பிரித்தி ஜிந்தா காட்டிய துள்ளல் ஆட்டங்கள்!
வித்யா பாலன்

கேரளாவைச் சேர்ந்த வித்யா பாலன் இந்தித் திரையுலகில் ஒரு சுற்று உலா வந்து, அங்கேயே தொழிலதிபரோடு திருமணம் முடித்தார். சற்றே உடல் பெருத்தாலும் வித்யா பாலனுக்கு இன்னும் வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவரது நடிப்புக்கும் கவர்ச்சிக்கும் இரசிகர்களின் ஆதரவும் இன்னும் குறையவில்லை.
கஜோல்
ஷாருக்கானுடன் பல படங்களில் இணைந்து கலக்கி, பின்னர் அஜய் தேவகனைக் காதலித்துக் கைப்பிடித்து – கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் வந்திருக்கிறார் கஜோல்.
தமிழில் மின்சாரக் கனவுகள் படத்தில் பிரபு தேவா-அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்த கஜோல், அண்மையில் தனுஷூடன் ‘வேலையில்லாப் பட்டதாரி 2’ படத்தில் நடித்திருந்தார்.
ஷில்பா ஷெட்டி
இளம் வயதில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடனப் புயல் பிரபுதேவாவுடன் ஷில்பா ஷெட்டி போட்ட ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
தொழிலதிபரை மணந்து கொண்டு பொதுமக்கள் பார்வையிலிருந்து விலகியிருந்தாலும், ஒரு மகனுக்குத் தாயாகி விட்டாலும் – ஷில்பா இன்ஸ்டாகிராம் பதிவுகளிலும் பாலிவுட் நிகழ்ச்சிகளிலும் இன்னும் முன்னணி வகிக்கிறார்.
யோகா பயிற்சியிலும் திறன்வாய்ந்த ஷில்பா அதுகுறித்து வெளியிட்ட புகைப்படங்களும், காணொளிகளும் இணைய வெளி எங்கும் நிறைந்து கிடக்கின்றன. ஷில்பாவின் கட்டுடலும், கவர்ச்சியும் இன்னும் இளசுகளைக் கூட கிறங்கடிக்கின்றன.