ஜோர்ஜ் டவுன் – பினாங்கு பெண் வணிகர் பாங் லி கூன் என்பவரிடமிருந்து சந்தை விலையிலிருந்து குறைந்த தொகைக்கு பங்களா ஒன்றை பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் வாங்கினார் என்ற ஊழல் குற்றச்சாட்டு மீதான வழக்கு இன்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் தொடங்குகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டாலும், பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் வழக்கு நடைபெறுவது ஜசெக-பக்காத்தான் கூட்டணியின் நட்சத்திர பிரச்சார பீரங்கியான லிம் குவான் எங்கை முடக்கிப் போடும் எனக் கருதப்படுகிறது.
முதல் கட்டமாக இன்று திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு வழக்கு நடைபெறும்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி லிம் குவான் எங் மற்றும் பாங் லி கூன் இருவரும் ஜோர்ஜ் டவுன் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். அதன் பின்னர் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலி அந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட விண்ணப்பித்தார்.
விவசாய நிலம் ஒன்றை குடியிருப்பு தகுதி கொண்ட நிலமாக மாற்றித் தரும் பினாங்கு அரசாங்க முடிவுக்கும், லிம் குவான் எங் தனக்கென பங்களா ஒன்றை சந்தை விலையிலிருந்து குறைந்த தொகைக்கு வாங்கியதற்கும் ஊழல் ரீதியான தொடர்பிருப்பதாகக் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளை லிம் மற்றும் பாங் இருவரும் மறுத்துள்ளனர்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் 2009-ஆம் ஆண்டு சட்டத்தின்படி இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் ஊழல் தொகையின் மதிப்புக்கு ஐந்து மடங்கு கூடுதலான அபராதம், அல்லது 10,000 ரிங்கிட் (எது அதிகமானதோ) விதிக்கப்படலாம்.
இதே வழக்கு தொடர்பில், 4.27 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய அந்த பங்களாவை, 2.8 மில்லியன் ரிங்கிட் விலைக்கு, சந்தை விலையை விட குறைந்த விலை எனத் தெரிந்தும் தனது பதவியைப் பயன்படுத்தி வாங்கினார் என்ற இரண்டாவது குற்றச்சாட்டையும் லிம் எதிர்நோக்கி உள்ளார். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அல்லது அபராதமும், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
இந்த குற்றச்சாட்டுகளில் பாங், குவான் எங்கிற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கிறார்.