Home நாடு துரியன் காபி விபரீதம்: சிகிச்சையில் மீண்ட நேபாள நாட்டவரின் கசப்பான அனுபவம்!

துரியன் காபி விபரீதம்: சிகிச்சையில் மீண்ட நேபாள நாட்டவரின் கசப்பான அனுபவம்!

933
0
SHARE
Ad

Durian coffeeஜார்ஜ் டவுன் – பினாங்கில் இலவசமாக வழங்கப்பட்ட துரியன் காபி என்ற பானத்தை அருந்திய இரு நேபாள பாதுகாவலர்கள் உட்பட 5 பேர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அவர்களில் மூவர் சிகிச்சைக்குப் பின் மீண்டுள்ள நிலையில், இரண்டு பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மீண்டவர்களில் ஒருவரான சப்கோடா மங்கள் பிரசாத் என்ற 45 வயதான நேபாள நாட்டவர் இது குறித்துக் கூறுகையில், தானும் தனது நண்பர் பிஷ்னு ஸ்ரேஸ்ட்னாவும் இதற்கு முன்பு இது போன்ற துரியன் கலந்த காபியை அருந்தியதில்லை என்றும், கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் தனது சக பெண் பாதுகாவலர் ஒருவர் தங்களுக்கு இலவசமாக இரண்டு துரியன் காபி பாக்கெட்டுகளை வழங்கியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“அதைக் குடித்தவுடன் எனக்கு குமட்டலும், தலைவலியும், உடல்வலியும் ஏற்பட்டது. 5 நிமிடத்தில் எனது உடல் அதீத வெப்பமடைந்துவிட்டது. சுயநினைவை இழப்பதற்கு முன்பு எனக்கு வலிப்பும் வந்தது. பின்னர் கண்விழித்துப் பார்த்த போது பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன்” என்றும் சப்கோடா மங்கள் பிரசாத் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, பினாங்கு மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் வான் மன்சோர் ஹம்சா கூறுகையில், இந்த துரியன் காபியைக் குடித்த 5 பேர் பினாங்கு மருத்துவமனையில் கடந்த ஜனவரி 27 மற்றும் 30-ம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் மூவர் உடல் நிலை சரியாகி வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்ட நிலையில், இருவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனிடையே, பினாங்கு சுகாதாரத் துறை அந்த காபி தயாரித்த நிறுவனத்தை ஆய்வு நடத்தி வருவதோடு, அந்த வகையான காபியின் மாதிரியையும் ஆய்வுக்காக எடுத்திருக்கிறது.

இந்நிலையில், மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கூறுகையில், “அந்த காபி கலவையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் இருந்தால், உடனடியாக அந்நிறுவனத்தின் பெயரை வெளியிடுவதோடு, சந்தையில் அதன் பொருட்களை திரும்பப்பெறச் செய்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.