கோலாலம்பூர் – மைனர் பெண்ணான அரசியை (இவானா) அதே பகுதியைச் சேர்ந்த காத்து என்ற காத்தவராயன் (ஜீ.வி.பிரகாஷ்) பாலியல் வல்லுறவு செய்து, கர்ப்பமாக்கிவிட்டதாக சமூக நல ஆர்வலர்களால் வழக்கு ஒன்று பதிவு செய்யப்படுகின்றது.
அந்த வழக்கை விசாரணை செய்யத் தொடங்குகிறார் காவல்துறை உயர் அதிகாரி நாச்சியார் (ஜோதிகா). காத்துவை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, அரசியை தனது பாதுகாப்பில் வைத்து பிரசவம் பார்க்கிறார்.
இவ்வழக்கு விசாரணையில் காத்தும், அரசியும் ஒருவரையொருவர் மனதார விரும்புவது தெரியவருகின்றது. அதேவேளையில், அரசியின் கர்ப்பத்திற்கு காத்து காரணமில்லை என்பதும் தெரியவருகின்றது.
அப்படியானால் அரசியின் கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்ற விசாரணையே ‘நாச்சியார்’ படத்தின் சுவாரசியம்.
நாச்சியாராக ஜோதிகா.. கம்பீரமான நடை உடை பாவணையோடு மிரட்டியிருக்கிறார்.
ஒரு பெண் காவல்துறை அதிகாரி நிஜத்தில் எப்படி இருப்பார் என்பதன் அடிப்படையில், கரடுமுரடாக எந்த ஒரு சமரசமும் இன்றி நடித்திருக்கிறார் ஜோதிகா.
வேலையில் கண்டிப்பு, கைதிகளிடம் உருட்டல் மிரட்டல், கணவரிடம் தனது சுயமரியாதையை இழக்காத தன்மை, ஒரு தாயாக தனது மகளிடம் நடந்து கொள்ளும்விதம் என ஜோதிகா வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் ஈர்க்கிறார்.
“நாச்சியா.. நான் சொல்றத கேளு இந்த கேஸ்ல ஒன்னால ஒன்னும் பண்ண முடியாது.. பேசாம காச வாங்கி அந்த பிள்ளைக்காவது குடு.. அவங்களுக்கு பிரயோஜனமா இருக்கும்” என்று அறிவுரை கூறும் சக போலீஸ் அதிகாரியின் மகளைக் கூப்பிட்டுத் தட்டிக் கொடுத்துவிட்டு, “உங்க மக தானே.. கடகடன்னு வளர்ந்திட்டா.. பாத்து” என்று நாசூக்காகத் தனது பதிலைச் சொல்லிவிட்டுப் போகும் இடத்தில் ஜோதிகா அசத்தல்.
ஜீ.வி.பிரகாஷ் காத்து கதாப்பாத்திரத்தில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்திருக்கிறார். அழுக்குச்சட்டையும் அரைக்கால் டவுச்சருமாக சிறப்பான நடிப்பு. அவரது அப்பாவி முகவெட்டு காத்து கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.
அதேபோல், இவானாவின் குழந்தைத்தனமான முகவெட்டும், இயல்பான நடிப்பும் அழகு.
இவர்களோடு முக்கியக் கதாப்பாத்திரங்களில் சில புதுமுகங்கள் நடித்திருந்தாலும் கூட, அந்தக் கதாப்பாத்திரங்களில் எதார்த்தமாகத் தெரிகின்றார்கள்.
திரைக்கதையைப் பொறுத்தவரையில் பல இடங்களில் தொய்வாகத் தெரிகின்றது. குறிப்பாக காத்து, அரசியின் காதல் காட்சிகளில் ஏனோ வழக்கமாக பாலா படத்தில் இருக்கும் ரசனையும், அழுத்தமும் இல்லை.
அதேவேளையில், படத்தின் நீளமும் சற்று சலிப்பை ஏற்படுத்துகின்றது.
மற்றபடி, விசாரணை விரியும் போது ஏற்படும் திருப்பங்கள் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு வீரியம் கூட்டியிருக்கிறது. பாடல்கள் காட்சிகளோடு பார்க்க ரசிக்க வைக்கின்றது.
ஈஸ்வரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்திலும் எதார்த்தம் நிறைந்து காணப்படுகின்றது.
மொத்தத்தில், வழக்கமான பாலா படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, அச்சமூட்டும் கொடூரக் கொலையின்றி உணர்ச்சிப்பூர்வமாக கிளைமாக்ஸ் வந்திருப்பது ரசிக்க வைக்கின்றது.
என்றாலும், பாலா படத்தில் நாம் எதிர்பார்த்துச் செல்லும் எதார்த்த மனிதர்களின் நகைச்சுவையும், மனதில் நின்று விடும் அழுத்தமான காட்சிகளும் இந்தப் படத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
-ஃபீனிக்ஸ்தாசன்