
மும்பை – இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடிகை ஸ்ரீதேவி துபாய் நகரில் மாரடைப்பால் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தி பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, மும்பையிலுள்ள அவரது இல்லத்தின் முன்பாக அவரது இரசிகர்களும், ஊடகங்களும் குவியத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்தியத் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் பேசிய ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி சஞ்சய் கபூர், ஸ்ரீதேவியின் நல்லுடலை மும்பை கொண்டு வர துபாய் புறப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு விவரங்கள் எதையும் தெரிவிக்கும் சூழ்நிலையில் குடும்பத்தினர் இல்லை என்றும் அவர் சோகத்துடன் கூறினார்.

இன்று மாலைக்குள் அவரது நல்லுடல் மும்பை இல்லம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதால், ஊடகத்தினர் பெருமளவில் ஸ்ரீதேவியின் இல்லத்தின் முன் குவிந்துள்ளனர்.
இதற்கிடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட கலையுலகம், அரசியல்வாதிகள் என அனைத்துத் தரப்பினரும் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை ஸ்ரீதேவி குடும்பத்தினருக்குத் தெரிவித்து வருகின்றனர்.