Home கலை உலகம் தங்கும்விடுதியில் ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் – துபாய் ஊடகம் முக்கியத் தகவல்!

தங்கும்விடுதியில் ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் – துபாய் ஊடகம் முக்கியத் தகவல்!

1302
0
SHARE
Ad

நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த உலகம் கண்விழித்த போது ஓர் அதிர்ச்சிகரமான செய்தி காத்திருந்தது. அது நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம்.

இளைமைக்கும், அழகுக்கும் எப்போதும் முன்னுதாரணமாகக் காட்டப்படும் இந்திய சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான ஸ்ரீதேவியின் திடீர் மரணத்தை யாராலும் நம்பவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

ஆனால், அது தான் உண்மை என உணர்ந்துவிட்ட பின்னர் ஸ்ரீதேவி எப்படி இறந்தார்? என்பதே பலரையும் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியாக இருக்கிறது.

#TamilSchoolmychoice

‘கார்டியாக் அரெஸ்ட்’ என்று சொல்லக் கூடிய இதய திடீர் செயலிழப்பு தான் ஸ்ரீதேவியின் மரணத்திற்குக் காரணம் என நம்பப்படுகின்றது.

தனது கணவர் போனி கபூரின் சகோதரி மகன் திருமணத்திற்காக, கடந்த வாரமே குடும்பத்தோடு துபாய் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.

அவருடன் போனிக்கபூரும், இளைய மகள் குஷியும் கபூரும் சென்றிருந்தனர்.

ரஸ் அல் கைமா என்ற பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, அப்பகுதியில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிரபல ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் தங்கும்விடுதியில் ஸ்ரீதேவி, போனிகபூர் மற்றும் இளைய மகள் குஷி ஆகியோர் தங்கியிருந்தனர்.

திருமணம் முடிந்த பிறகு போனி கபூரும், குஷியும் மும்பை திரும்பியிருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீதேவி அத்தங்கும்விடுதியிலேயே தங்கியிருந்திருக்கிறார்.

இந்நிலையில், தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில், போனி கபூர் மும்பையிலிருந்து மீண்டும் துபாய்க்கு வந்து, சனிக்கிழமை மாலை துபாய் நேரப்படி 5.30 மணியளவில் தங்கும்விடுதியை அடைந்திருக்கிறார்.

போனிகபூரும், ஸ்ரீதேவியும் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு, இரவு விருந்துக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கின்றனர்.

அதன் பின்னர் குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதேவி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த போனி கபூர் கதவைத் தட்டிப்பார்த்திருக்கிறார்.

எந்த ஒரு பதிலும் இல்லாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குளியலறைத் தொட்டியில் ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் காணப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து, நண்பரின் உதவியோடு, அவசர மருத்துவ சிகிச்சைக்கு போனி கபூர் ஏற்பாடு செய்திருக்கிறார்.

எனினும், ஸ்ரீதேவியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.

அதன்பின்னர் இரவு 9 மணியளவில் போனி கபூர் துபாய் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் பின்னரே ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஸ்ரீதேவியின் நல்லுடல் தொழிலதிபர் அனில் அம்பானியின் தனிவிமானம் மூலம் மும்பைக்குக் கொண்டுவரப்படவிருக்கிறது.

தகவல்: காலீஜ் டைம்ஸ்