Home நாடு தேர்தல்’14: காம்பீர் சட்டமன்றம்: “வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வெற்றி பெறுவேன்!” – அசோஜன் (பாகம் 2)

தேர்தல்’14: காம்பீர் சட்டமன்றம்: “வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வெற்றி பெறுவேன்!” – அசோஜன் (பாகம் 2)

1476
0
SHARE
Ad
டத்தோ எம்.அசோஜன்

(காம்பீர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் அந்தத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகள், கொண்டுவரப்பட்ட  உருமாற்றங்களை  செல்லியலில் இடம் பெற்ற தனது முதல் பாக நேர்காணலில்  விளக்கிய டத்தோ எம்.அசோஜன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்நோக்கும் சவால்கள், வெற்றி வாய்ப்புகள் ஆகியவை குறித்து தொடர்கிறார்…)

“2004 முதல் சட்டமன்ற உறுப்பினராக பிரமிக்கத்தக்க மேம்பாடுகளை புக்கிட் காம்பீர் நகரில் ஏற்படுத்தியும் கடந்த 2013 பொதுத் தேர்தலில் வெறும் 310 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது எதனால்?”

நாம் முன் வைத்த கேள்விக்குப் பதிலளிக்கத் தயாரானார் அசோஜன்.

வாக்குகள் பெரும்பான்மை 2013-இல் குறைந்தது ஏன்?

#TamilSchoolmychoice

“ஒரு தொகுதியில் வாக்காளர்களின் மனநிலை என்பது வேறு. களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகள் ஏற்படுத்தும் குழப்பங்கள் என்பது வேறு. சில சமயங்களில் வாக்காளர்கள் நமக்கு ஆதரவு தெரிவித்தாலும், சில அதிருப்தி அரசியல்வாதிகள் குழப்பங்களை ஏற்படுத்தி விடுவார்கள். அதுதான் எனக்கும் நேர்ந்தது” என்ற பீடிகையோடு ஆரம்பித்த அசோஜன் தொடர்ந்தார்.

2008-2013 பொதுத் தேர்தல்களில் அசோஜன் காம்பீர் தொகுதியில் பெற்ற வாக்கு விவரங்கள் (தகவல்: நன்றி undinfo)

“கடந்த பொதுத் தேர்தலில் லெடாங் தொகுதியில் அம்னோவுக்குள் சில குழப்பங்கள் இருந்தன. மலாய்க்கார வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காம்பீர் சட்டமன்றத்தில் மஇகா போட்டியிடுவது குறித்து சில உள்ளூர் அம்னோ தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால், மீண்டும் மஇகாவுக்கே தொகுதி ஒதுக்கப்பட்டதால், இரண்டு அம்னோ தொடர்புடைய மலாய்க்கார வேட்பாளர்கள் அந்த முடிவில் அதிருப்தி கொண்டு சுயேச்சையாக நின்றார்கள்.  இதனால் காம்பீர் தொகுதியில் 4 முனைப் போட்டி ஏற்பட்டது. மலாய் வாக்குகள் பிளவுபட்டன. எனினும் 2013-இல் எனக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 2008-இல் நான் பெற்றதை விட அதிகமாகவே இருந்தது. இருப்பினும் வாக்குகளின் பெரும்பான்மை வித்தியாசம் குறைந்தது. இதிலிருந்து வாக்காளர்களின் ஆதரவு எனக்குக் குறையவில்லை, மாறாக அதிகரிக்கவே செய்தது என்பதும், மலாய் வேட்பாளர்கள் சுயேச்சையாக நின்று வாக்குகளைப் பிரித்ததால்தான் பெரும்பான்மை வித்தியாசம் குறைந்தது என்பதும் புலப்படும்”

“ஆனால் இந்த முறை அப்படி நேர வாய்ப்பில்லை. காரணம், குறுகிய வாக்குகளில் வென்றாலும், கடந்த 5 ஆண்டுகளில் நான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய விதத்திலும், கொண்டு வந்த மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களும் அம்னோவினரும் ஒரே மனதாக திருப்தியில் இருக்கின்றனர். காம்பீர் தொகுதி மஇகாவுக்கு ஒதுக்கப்படுவதில் ஆட்சேபமில்லை. ஆனால் வேட்பாளர் அசோஜனாக இருக்க வேண்டும் என அம்னோவினர் கூறும் அளவுக்கு இங்கே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது” என மேலும் தொடர்கிறார் அசோஜன்.

மேம்பாடுகளுடன் நவீனமயமாகி வரும் காம்பீர் தொகுதியின் தோற்றம்

மீண்டும் காம்பீர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு “வேட்பாளர்களை முடிவு செய்வது தேசியத் தலைவரின் உரிமை. எனவே அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், 2004 முதல் நான் இந்தத் தொகுதியில் ஆற்றியிருக்கும் பணிகள், 2008-2013 தவணைக் காலத்தில் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக நான் வழங்கிய சேவைகள், கடந்த சில ஆண்டுகளாக ஜோகூர் மாநில மஇகா தலைவராக நான் கட்சியில் ஏற்படுத்தியிருக்கும் ஒற்றுமையான, கிளை, தொகுதித் தலைவர்களுக்கு இடையிலான அணுக்கமான உறவுகள், தேசியத் தலைவரின் திட்டங்களுக்கு நாங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என நம்புகிறேன். அவ்வாறு வழங்கப்பட்டால் மீண்டும் காம்பீர் தொகுதியில் வென்று காட்டுவேன்” என உறுதியுடன் கூறுகிறார் அசோஜன்.

அசோஜனுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு

அசோஜனின் காம்பீர் சட்டமன்றத் தொகுதிக்கான அலுவலகத்தில் அவரைச் சந்திக்க நாம் சென்றபோது, அங்கு அவரது செயலாளராகப் பணிபுரியும் ரோஸ்லியா பிந்தி ஓஸ்மான் (Rosliah Binti Osman) என்ற மலாய்க்காரப் பெண்மணியைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது.

ரோஸ்லியா பிந்தி ஓஸ்மான் – அசோஜனின் தொகுதி சேவை அலுவலக உதவியாளர்

11 ஆண்டுகளாக அசோஜனிடம் செயலாளராக இருக்கின்றார் ரோஸ்லியா. உள்ளூர்க்காரர். காம்பீர் தொகுதியைப் பற்றிக் கூறத் தொடங்கினார்:

“நான் 11 வருடங்களுக்கு முன்னால் அசோஜனிடம் அலுவலக உதவியாளராகச் சேர்ந்ததிலிருந்தும், 2004 ஆண்டு முதல் அவர் இந்த சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றதிலிருந்தும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போது இந்த இடங்களெல்லாம் எப்படியிருந்தது என்பது எனக்குத்தான் தெரியும். இன்றோ எல்லாம் மாறிவிட்டது. மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்குக் காரணம் அவரது நேரடியான ஈடுபாடும், முயற்சிகளும், உழைப்பும்தான். இதையெல்லாம் நான் அவரிடம் வேலை செய்வதால் அவருக்கு ஆதரவாகக் கூறவில்லை. உள்ளூர் வாக்காளர் என்ற முறையில் நேரடியாக நான் பார்த்த வகையில் இதைக் கூறுகிறேன்”

முகமட் இஸ்னின் பின் தாவாஃப் – காம்பீர் தொகுதி குறித்து நூல் வெளியிட்ட எழுத்தாளர்

நாம் அசோஜனைச் சந்திக்கச் சென்றபோது, அவரைச் சந்திக்க வந்திருந்த மற்றொருவர் உள்ளூர் மலாய் எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான முகமட் இஸ்னின் பின் தாவாஃப் (Mohd Isnin Bin Tawaf).  இவர் புக்கிட் காம்பீர் வட்டாரத்திலுள்ள சிறந்த சுற்றுலா மையங்கள் குறித்தும், பார்க்க வேண்டிய இடங்கள் குறித்தும், புகைப்படங்கள், கவிதைகள், எழுத்தோவியங்கள் எனக் கலந்து அழகான ஒரு சிறு நூலை ‘டிராவலோக்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார், அசோஜனின் ஆதரவுடன்.

முகமட் இஸ்னின் பின் தாவாஃப் காம்பீர் தொகுதி குறித்து வெளியிட்ட நூல்

இவரும் தொகுதியில் அசோஜன் மேற்கொண்ட பணிகள், தன்னைப் போன்ற உள்ளூர் எழுத்தாளர்களுக்கு அவர் வழங்கி வரும் ஆதரவு, இந்த வட்டாரத்தை மேம்படுத்த எடுத்துவரும் முயற்சிகள் குறித்து பாராட்டு தெரிவிக்கிறார்.

அசோஜனின் கல்விப் பணிகள்

ஆசிரியர் தொழிலில் இருந்து அரசியலுக்கு வந்த காரணத்தினாலும், தனது கல்விப் பின்னணியினாலும், தனது காம்பீர் தொகுதியில் கல்விக்கும் முக்கியத்துவம் தருகிறார் அசோஜன்.

தொகுதியிலிருந்து பல்கலைக் கழகம் செல்லும் ஒவ்வொரு மாணவருக்கும் கைச்செலவாக 100 முதல் 200 ரிங்கிட் வரை வழங்குகிறார் அசோஜன். சபா, சரவாக் போன்ற மாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு 500 ரிங்கிட் வரை வழங்கப்படுகிறது.

பாஸ் மீண்டும் போட்டியிடுமா?

14-வது பொதுத் தேர்தலை நெருங்கும் நேரத்தில் காம்பீர் தொகுதியில் மற்றொரு வித்தியாசமான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2008-2013 என இரு பொதுத் தேர்தல்களிலும் இங்கே அசோஜனை எதிர்த்துப் போட்டியிட்டது பாஸ் கட்சி. இந்த முறையோ காம்பீர் தொகுதி பிரிபூமி பெர்சாத்து எனப்படும் மகாதீர்-மொகிதின் யாசின் தலைமையிலான கட்சிக்கு பக்காதான் ஹரப்பான் கூட்டணி சார்பில் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, பாஸ் கட்சி மீண்டும் இங்கே தனித்துப் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதன் காரணமாக காம்பீர் தொகுதியில் தேசிய முன்னணி, பாஸ், பெர்சாத்து என மும்முனைப் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மலாய் வாக்குகள் பிரியும் என்றாலும், அது தேசிய முன்னணிக்கே சாதகமாக அமையும் எனக் கணிக்கப்படுகிறது.

உள்ளூர் சீன சமூகத்தின் ஆதரவும் தனக்கு அபரிதமான அளவில் இருப்பதால் மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் இங்கே நிச்சயம் வென்று காட்ட முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் அசோஜன். சீனப் பள்ளிகளுக்கும், சீன ஆலயங்களுக்கும் தான் வழங்கி வரும் ஆதரவு, இங்குள்ள சீன குடியிருப்பு (கம்போங் பாரு சீனா) பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியிருப்பது, நகரில் வளர்ச்சியையும், மேம்பாடுகளையும் கொண்டு வந்த காரணத்தால் அதிகரித்திருக்கும் வியாபாரங்கள் ஆகிய காரணங்களால் சீன மக்களின் ஆதரவு தனக்கு கணிசமான அளவில் தொடர்வதாகவும் அசோஜன் விளக்குகிறார்.

56 விழுக்காடு மலாய் வாக்காளர்கள்; 39 விழுக்காடு சீன வாக்காளர்கள்; 4 விழுக்காடு இந்தியர்கள் – என இதுதான் காம்பீரின் இனவாரியான வாக்காளர் விழுக்காடுகள்.

எனவே, மலாய் வாக்குகள் பாஸ் கட்சியின் போட்டியால் பிளவுபட்டாலும், சீனர்கள் மற்றும் இந்தியர்களின் ஆதரவைக் கொண்டு காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணிக்கும் – மஇகாவுக்கும் வெற்றி வாங்கித் தரமுடியும் என்ற உறுதி மொழியோடு தனது நேர்காணலை நிறைவு செய்கிறார் அசோஜன்!

அசோஜன் வழங்கிய நேர்காணலின் காணொளி (வீடியோ) வடிவத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

தொகுப்பு -இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரை :

தேர்தல் ’14: காம்பீர்: அசோஜனின் முயற்சியால் நவீன நகராக உருமாறிய தொகுதி! (பாகம் 1)