புதுடெல்லி – துபாயில் நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
தான் விசாரித்த வகையில், ஸ்ரீதேவி அளவுக்கு அதிகமான மதுபானம் எடுத்துக் கொள்பவர் கிடையாது என்றும், உடல்நலனில் அதிக அக்கறை கொண்டவர் என்றும் சுப்ரமணிய சுவாமி தெரிவித்திருக்கிறார்.
ஒருவர் குளியலறைத் தொட்டியில் மூழ்கி சாவது என்பது அவ்வளவு எளிதான ஒன்று கிடையாது என்றும், யாராவது நீரில் மூழ்கடித்துக் கொன்றால் மட்டுமே அவ்வாறு நடக்கும் என்றும் சுப்ரமணிய சுவாமி தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஸ்ரீதேவி இருதயச் செயலிழப்பில் இறந்ததாக மருத்துவர்கள் முதலில் தெரிவித்தது ஏன்? ஸ்ரீதேவி தங்கியிருந்த விடுதியில் இருந்த இரகசிய கேமராப் பதிவுகள் என்ன ஆனது? போன்ற கேள்விகளையும் சுப்ரமணிய சுவாமி முன்வைத்திருக்கிறார்.
அதேவேளையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கும், பாலிவுட் நடிகைகளுக்குமான தொடர்பு குறித்தும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுப்ரமணிய சுவாமி குறிப்பிட்டிருக்கிறார்.