Home நாடு மு.க.ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்தார்

மு.க.ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்தார்

463
0
SHARE

புத்ரா ஜெயா – மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திங்கட்கிழமை (26 பிப்ரவரி 2018) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை புத்ரா ஜெயாவிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

அந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கோலாலம்பூரில் ஸ்டாலின் உரையாற்றும் காட்சி

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 25-ஆம் தேதி கண்ணதாசன் அறவாரியமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து தலைநகர் ஜாலான் ராஜா லாவுட்டில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டபத்தில் நடத்திய உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பிற்பகலில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“மலேசியாவில் அயல்நாடு உணர்வே தோன்றவில்லை” ஸ்டாலின் பெருமிதம்

தனது மலேசிய வருகை குறித்தும் பிரதமர் நஜிப்புடனான சந்திப்பு குறித்தும், ஸ்டாலின் பின்வருமாறு தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:

கோலாலம்பூரில் நடைபெற்ற உலக தாய்மொழி தின விழாவில் சரவணன், டாக்டர் சுப்ரா, ஸ்டாலின்

“மலேசியாவில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் மலேசிய கண்ணதாசன் அறவாரியம் இணைந்து நடத்திய உலகத் தாய்மொழி தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.

விழாவில் பங்கேற்றபோது, அயல்நாட்டில் இருக்கின்ற உணர்வே தோன்றவில்லை. காரணம், அந்த அரங்கம் முழுவதும் தமிழ் இலக்கிய, பண்பாட்டு, கலாச்சாரங்களில் ஆழ்ந்த பற்றுகொண்ட தமிழ் முகங்கள் ஏராளமானோர் நிறைந்து இருந்தனர்.

அந்நிகழ்ச்சியில், மலேசிய வாழ் தமிழர்கள் தமிழ்மொழிக்கு ஆற்றி வரும் அளப்பறிய பணிகளை பாராட்டியதுடன், 1966 ஆம் ஆண்டு முதல் உலக தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நடைபெற்றதை நினைவுகூர்ந்தேன். மேலும், வங்க மொழி காக்கப் போராடிய மாணவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளித்து உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுவதை குறிப்பிட்டு, இந்திமொழியின் ஆதிக்கத்திலிருந்து தமிழ்மொழியைப் பாதுகாக்க உயிர் தியாகம் செய்த தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வங்கத்து மாணவர்களின் தியாகங்களுக்கு ஒப்பானது என்பதை சுட்டிக்காட்டி, அவர்களது தியாகங்களை போற்றும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ஆம் நாளில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுவதையும் நினைவு கூர்ந்தேன்.

அதுமட்டுமின்றி, தமிழின் பெருமையை நிலைநிறுத்தவும், தமிழ்மொழி காக்கவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் கொண்டு வந்ததையும், மெட்ராஸ் ஸ்டேட் என்றிருந்த மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதையும் பெருமையோடு எடுத்துரைத்து, அறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள், மாநில அரசின் சார்பில் தமிழ் தாய் வாழ்த்து கொண்டு வந்ததையும், உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டை தமிழர் ஆண்டாகவும், அதையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட நடவடிக்கை எடுத்ததையும், உலகின் மூத்த மொழியான தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்த வரலாறுகளை எல்லாம் எடுத்துரைத்தேன்.

அதேபோல, கடந்த 2009-ஆம் ஆண்டு, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்று, ஒரே நாளில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ‘தமிழவேள் ஆதி குமணன்’ நூலகம் திறக்க உத்தரவிட்டதையும், கடந்த ஆண்டு எனது பிறந்தநாளன்று, “பொன்னாடைகளை தவிர்த்து தமிழ்ப் புத்தகங்கள் பரிசளிக்க வேண்டும்”, என நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இன்றுவரையிலும் பரிசாக வழங்கப்படும் புத்தகங்களை, தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு வழங்கி வருவதையும், விரிவாக எடுத்துரைத்தேன்.

பின்னர், மலேசியப் பிரதமர் மாண்புமிகு நஜிப் ரசாக் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரது சிறந்த நிர்வாகத்தில் மலேசிய நாடு முன்னேற்றமடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மலேசிய நாட்டின் முன்னேற்றத்தில் மலேசிய வாழ் இந்தியர்களும்-குறிப்பாக தமிழர்களும் பெரும் பங்காற்றி வருவது பெருமைக்குரியதாக இருக்கின்றது.”

Comments