Home நாடு “எனது பெயரைக் கெடுக்கும் செயல்” – அப்துல் அசிஸ் காவல் துறையில் புகார்

“எனது பெயரைக் கெடுக்கும் செயல்” – அப்துல் அசிஸ் காவல் துறையில் புகார்

889
0
SHARE
Ad
காவல் துறை புகாருக்குப் பின்னர் பத்திரிக்கையாளரிடம் உரையாடும் அப்துல் அசிஸ்

ஷா ஆலாம் – சர்ச்சைக்குரிய பினாங்கு சுரங்கப் பாதை விவகாரத்தில் தனது பெயரைச் சம்பந்தப்படுத்தி வெளியாகியிருக்கும் தகவல்கள் தனது பெயரைக் கெடுக்கும் செயல் எனச் சாடியிருக்கும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம், தன்னைத் தற்காக்கும் விதமாக இன்று வெள்ளிக்கிழமை ஷா ஆலாம் காவல் துறையில் புகார் ஒன்றை செய்தார்.

இன்று காலை 9.30 மணியளவில் ஷா ஆலாம் காவல் துறை தலைமையகத்தில் சுமார் 50 ஆதரவாளர்கள் புடைசூழ தனது புகாரை அப்துல் அசிஸ் சமர்ப்பித்தார்.

பினாங்கு சுரங்கப் பாதை விவகாரத்தில் தனக்கு சம்பந்தமில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்தத் திட்டத்திற்குக் குத்தகை பெற்றிருக்கும் செனித் கொன்ஸ்ட்ரக்‌ஷன் (Consortium Zenith Construction Sdn Bhd) நிறுவனத்திடமிருந்து அவர் 3 மில்லியன் ரிங்கிட் ஆலோசனைக் கட்டணமாகப் பெற்றார் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

செனித் நிறுவனத்திடமிருந்து சட்டக் கடிதம் ஒன்றைக் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி பதிவுத் தபாலில் தான் பெற்றதாகவும் எனினும் அந்தத் திட்டத்தில் தான் சம்பந்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

காவல் துறையினரோடும் மற்ற அரசாங்க இலாகாக்களோடும் இந்த புலன் விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்கத் தான் தயார் என்றும் அப்துல் அசிஸ் உறுதியளித்தார்.

தனது பெயரை யாரோ பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று அப்துல் அசிஸ் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் அப்துல் அசிசுக்கு வழங்கப்பட்ட சட்டக் கடிதத்தில் கண்டுள்ள விவரங்கள் யாவும் பொய் என்றும் உடனடியாக அந்தக் கடிதத்தை செனித் நிறுவனம் திரும்பப் பெறவேண்டும், இல்லாவிட்டால் பதில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரது வழக்கறிஞர் டத்தோஸ்ரீ ஜஹாபர்டின் முகமட் யூனுஸ் எச்சரித்துள்ளார்.