Home உலகம் மலேசியப் போலீஸ் அதிகாரியின் வங்கிக் கணக்கு ஆஸ்திரேலியாவில் முடக்கம்

மலேசியப் போலீஸ் அதிகாரியின் வங்கிக் கணக்கு ஆஸ்திரேலியாவில் முடக்கம்

1015
0
SHARE
Ad

சிட்னி – மலேசியக் காவல் துறை அதிகாரியும், புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் வான் அகமட் நஜ்முடின் முகமட் சிட்னியில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கிக் கணக்கில் 320,000 ஆஸ்திரேலிய டாலர் இருந்ததாகவும், அதன் மதிப்பு சுமார் 971,800 மலேசிய ரிங்கிட்டாகும் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தத் தகவலை சிட்னி மோர்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பணம் ஒரு குற்றத்தினால் பெறப்பட்ட பணம் அல்லது முறைகேடாக பணமாற்றம் செய்யப்பட்ட (laundered money) செய்யப்பட்டது என்று ஆஸ்திரேலியாவின் மத்தியப் போலீஸ் துறை சந்தேகப்பட்டதாகவும் அந்தப் பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் இந்தப் பணத்தை முடக்கம் செய்யும் விண்ணப்பத்தை கடந்த ஆண்டே ஆஸ்திரேலிய போலீஸ் சமர்ப்பித்ததாகவும் அந்த விண்ணப்பத்தை ஏற்று நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது என்றும் அந்தப் பத்திரிக்கை செய்தி கூறுகிறது.

காமன்வெல்த் வங்கியிலுள்ள வான் அகமட்டின் இந்தக் கணக்கு அவரது பெயரால் 2011-இல் திறக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 2016-இல் அவர் ஆஸ்திரேலியா சென்றதற்குப் பின்னர் இந்த வங்கிக் கணக்கில் ரொக்கமாகப் பணம் செலுத்தப்படும் படலம் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் 5 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து அடையாளம் தெரியாத பலர் இந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தத் தொடங்கினர்.

ஒரே மாதத்தில் 290,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கும் மேற்பட்ட பணம் வங்கிக் கணக்கில் சேரத் தொடங்கியதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் ஆஸ்திரேலிய காவல் துறையின் கவனத்திற்கு வந்தது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் தொடர்ந்து அளவுக்கதிகமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டால், வங்கிகள் கட்டாயம் அதனைக் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் ஆஸ்திரேலியாவில் அமுலில் இருக்கிறது. இந்த சட்டத்தின்படிதான் ஆஸ்திரேலியக் காவல் துறையின் கவனத்தை இந்த விவகாரம் ஈர்த்திருக்கிறது.

எனினும் இந்தப் பணத்தை மீட்க வான் அகமட் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. “நீதிமன்ற நடவடிக்கை மிகவும் செலவு பிடிக்கும்” என்றும் தான் எந்தவிதத் தவறையும் செய்யவில்லை என்றும் வான் அகமட் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியக் காவல் துறையின் இந்த வங்கிக் கணக்கு முடக்க நீதிமன்ற விண்ணப்பம் அளவுக்கதிகமாக வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்ததால் மட்டுமே முடக்கப்பட்ட நடவடிக்கை என்றும் மாறாக வான் அகமட் குற்றம் ஏதும் புரிந்தார் என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்றும் விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

இது குறித்து கருத்துரைத்திருக்கும் வான் அகமட் தனது விளக்கத்தை தான் சார்ந்திருக்கும் காவல் துறைக்கு வழங்கி விட்டதாகவும் அவரது இலாகா ஆஸ்திரேலியக் காவல் துறைக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.