Home நாடு தொகுதி எல்லை மாற்றம் – இடைக்காலத் தடைக்கான போராட்டம் முடிவுக்கு வந்தது

தொகுதி எல்லை மாற்றம் – இடைக்காலத் தடைக்கான போராட்டம் முடிவுக்கு வந்தது

782
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – சிலாங்கூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தொகுதி எல்லை சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட ஆட்சேபங்கள் தெரிவித்து, அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் விண்ணப்பம் இன்று வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (கோர்ட் ஆப் அப்பீல்) விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு சிலாங்கூர் மாநில அரசின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, இனி தேர்தல் ஆணையம் இந்த எல்லை சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட பிரதமருக்கு அனுப்பி வைக்கலாம்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக அம்மாநில மந்திரி பெசார் அஸ்மின் அலி (படம்) தனது சத்தியப் பிரமாண அறிக்கையை (அபிடேவிட்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

திங்கட்கிழமை (மார்ச் 5) தொடங்கும் 2018-ஆம் ஆண்டுக்கான முதல் தவணை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், மாமன்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதங்களுக்குப் பின்னர் அரசாங்கம் தேர்தல் ஆணையத்தின் எல்லை சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் அரசியல் அமைப்பு சாசனத்தின் கீழ் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் முறையான பணிகள் மீது இடைக்காலத் தடைவிதிக்கும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் கொண்டிருக்கவில்லை என மேல்முறையீட்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

எனினும், இந்த விவகாரத்தில் சிலாங்கூர் அரசாங்கத்தின் முழுமையான மேல்முறையீடு எதிர்வரும் மார்ச் 23-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும்.

மார்ச் 5-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத் தொடரில் முதல் நாள் மாமன்னரின் உரை இடம் பெறும். அதன் பின்னர் மாமன்னர் உரை மீதான விவாதங்களுக்கு மார்ச் 25-ஆம் தேதி வரை கால அவகாசம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அநேகமாக மார்ச் 26-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் தொகுதிகளுக்கான எல்லை சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.