Home நாடு தேர்தல்’14 – தேசிய முன்னணி 5 மாநிலங்களை இழக்கும்!

தேர்தல்’14 – தேசிய முன்னணி 5 மாநிலங்களை இழக்கும்!

1390
0
SHARE
Ad
ரபிசி ரம்லி – பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர்

கோலாலம்பூர் – ‘இன்வோக்’ (Invoke) எனப்படும் ஆய்வு மையத்தின் ஆய்வுகளின்படி எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் 5 மாநிலங்களில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர், பினாங்கு மாநிலங்கள் பக்காத்தான் அரசாங்கத்தால் மீண்டும் தக்க வைத்துக் கொள்ளப்படும். புதிதாக கெடா, பேராக், ஜோகூர் ஆகிய மாநிலங்களை பக்காத்தான் கைப்பற்றும் என்றும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனைக் கூறுவது இன்வோக் என்ற ஆய்வு மையத்தின் நிறுவனர் – பிகேஆர் கட்சியின் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி என்பதுதான் ஒரே நெருடல். அதன் காரணமாக இந்த ஆய்வு எதிர்க்கட்சிகளின் கூற்று என சிலர் புறக்கணிக்கக் கூடும். எனினும் இந்த ஆய்வுகள் மக்களிடையே நேரடியாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலான ஆதாரபூர்வமான ஆய்வு என ரபிசி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேற்கு மலேசியாவில் 89 நாடாளுன்றத் தொகுதிகளை பக்காத்தான் வெல்லும் என்பதும் தேசிய முன்னணி 76 தொகுதிகளை வெல்லும் என்பதும் மற்றொரு ஆய்வின் முடிவாகும்.

சபா, சரவாக் மாநிலங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலங்களிலும் தொங்கு சட்டமன்றம் அமையும் – அதாவது எந்தக் கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத இழுபறி நிலைமை ஏற்படும் – என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

பாஸ் கட்சி எந்த ஒரு நாடாளுமன்றத்தையும் வெல்ல முடியாத பரிதாபம் ஏற்படும் – தற்போது ஆட்சியில் இருக்கும் கிளந்தான் மாநிலத்தையும் அது தேசிய முன்னணியிடம் இழக்கும் – என்பது ஆய்வின் இன்னொரு முடிவாகும். 1990 முதல் கிளந்தானில் பாஸ் ஆட்சியில் இருந்து வருகிறது.

இந்த ஆய்வுகள் குறித்து கருத்துரைத்த ரபிசி ரம்லி, “மும்முனைப் போட்டிகளால் வாக்குகள் பிரிவதால் கிளந்தான் மாநிலத்தைக் கைப்பற்றும் தேசிய முன்னணி பகாங், திரெங்கானு ஆகிய மாநிலங்களையும் கைப்பற்றும்” எனக் கூறியுள்ளார்.

மலாய் வாக்காளர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு சரிவு

மேற்கு மலேசியாவில் உள்ள மலாய் வாக்காளர்களிடையே கூடுதலான ஆதரவு தேசிய முன்னணிக்கு இருந்தாலும், அந்த ஆதரவு கட்டம் கட்டமாகக் குறைந்து வருகிறது எனவும் இன்வோக் ஆய்வு தெரிவிக்கிறது. 28.5 விழுக்காடு மலாய்க்காரர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு தருகின்றனர். பக்காத்தானுக்கோ 14.1 விழுக்காடு மட்டுமே ஆதரவு தரும் மலாய்க்காரர்கள் பாஸ் கட்சிக்கு 18 விழுக்காடு ஆதரவைத் தருகின்றனர்.

எனினும் 22.3 விழுக்காடு மலாய்க்காரர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிப்போம் என்பதைக் கூற மறுக்கின்றனர். 17 விழுக்காட்டினர் இன்னும் முடிவு செய்யவில்லை என்கின்றனர். இதனை வைத்துப் பார்க்கும்போது மலாய் வாக்காளர்களிடையே பக்காத்தானுக்கான ஆதரவு அலை நாளடைவில் பெருகும் என எதிர்பார்க்கலாம் என ரபிசி கருதுகிறார்.

சபா, சரவாக் நிலைமை என்ன?

சபா மாநிலத்தில் பக்காத்தான் 8 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்லும் எனக் கணிக்கும் ரபிசி ரம்லி சரவாக் மாநிலத்தில் 5 அல்லது 6 தொகுதிகளை பக்காத்தான் வெல்ல முடியும் எனக் கணிக்கிறார்.

மொத்தத்தில் 103 நாடாளுமன்றத் தொகுதிகளை பக்காத்தான் கைப்பற்ற முடியும். ஆட்சி அமைக்க 111 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கூடுதலான எண்ணிக்கைத் தேவைப்படும்.