வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் விருப்பம் தெரிவித்திருப்பதாக வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் தென்கொரியத் தலைவர்கள் தெரிவித்ததையடுத்து கிம்மைச் சந்திக்க டிரம்ப் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை, தென்கொரியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சங் உய் யோங் தலைமையிலான பேராளர்கள், வடகொரியா சென்று, அங்கு அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அவரது மனைவியுடன் விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
இருநாட்டுத் தலைவர்களும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக, அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்திக் கொண்டு, அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள கிம் ஜோங் உன் ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இருவரையும் சந்திக்க வைக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தென்கொரியத் தலைவர்கள் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், டிரம்ப் உடனடியாக கிம் ஜோங் உன்னைச் சந்திக்க ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
எனவே மிக விரைவில் டிரம்ப் – கிம் ஜோங் உன் சந்திப்பு நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.