புத்ரா ஜெயா – பினாங்கு கடலடி சுரங்கப் பாதை விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணை செய்யப்பட்ட டத்தோஸ்ரீ ஞானராஜா என்ற வணிகப் பிரமுகர் நேற்று சனிக்கிழமை 150,000 ரிங்கிட் பிணையில் (ஜாமீனில்) விடுதலை செய்யப்பட்டார்.
ஞானராஜாவின் பல்வேறு சொத்துகளையும் ஊழல் தடுப்பு ஆணையம் நடைபெற்று வரும் விசாரணையின் தொடர்பில் முடக்கி வைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஆலோசகராகச் செயல்பட்டதற்காக 19 மில்லியன் ரிங்கிட்டை அவர் பெற்றார் என்ற புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் அவரைக் கைது செய்தது.
அதுமட்டுமின்றி அவரிடமிருந்து 7.5 மில்லியன் மதிப்புடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அவரது நான்கு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து 3.6 மில்லியன் ரொக்கம் முடக்கப்பட்டிருக்கிறது. கைப்பற்றப்பட்ட சொத்துகளில் அவரது இல்லம், 13 இலட்சம் ரிங்கிட் மதிப்புடைய நான்கு விலையுயர்ந்த கார்களும் அடங்கும்.
பினாங்கு சுரங்கப் பாதையை அமைக்கும் குத்தகையைப் பெற்ற கொன்சோர்ட்டியம் செனித் கொன்ஸ்ட்ரக்ஷன் சென்டிரியான் பெர்ஹாட் (Consortium Zenith Construction Sdn Bhd) என்ற நிறுவனம் இந்த டத்தோஸ்ரீ வணிகருக்கு அந்த 19 மில்லியனை வழங்கியதாகவும், பின்னர் ஒப்புக் கொண்டபடி உரிய சேவைகளை ஞானராஜா வழங்கவில்லை என்பதால் அவர்மீது அந்த நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கும் கடிதத்தை அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பினாங்கு சுரங்கப் பாதை தொடர்பான வழக்கு விசாரணையை பிரச்சனையின்றி “முடித்துக் கொடுப்பதற்காக” அவருக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட சொத்துகளில் அந்த டத்தோஸ்ரீயின் இல்லம் 2.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்டது என்றும், மூன்று தொலைக் காட்சிகள் 167,900 ரிங்கிட் மதிப்பு கொண்டவை என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.