கோலாலம்பூர் – சிலாங்கூர் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கு முன்பாக உங்கள் சொந்த தொகுதியான பெக்கானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பிரச்சினையை முதலில் சரி செய்யுங்கள் என சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
“காஜாங்கில் நீண்ட நாட்களாக இருந்து வந்த வெள்ளப் பிரச்சினையை, சிலாங்கூர் அரசாங்கம் சரி செய்து காட்டியிருக்கிறது. சிலாங்கூர் அரசாங்கத்திற்குக் கிடைத்த மற்றோரு வெற்றி அதுவாகும். ஆனால் பெக்கானில் இன்னும் வெள்ளப் பிரச்சினை சரி செய்யப்படாமல் இருக்கிறது” என அஸ்மின் அலி குறிப்பிட்டிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தில் பேசிய அஸ்மின், தேசிய கடன் மீதான வட்டி அதிகரித்து வருவதற்கு 1எம்டிபி விவகாரம் காரணமா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த நஜிப், அதை விட சிலாங்கூர் தண்ணீர் நிறுத்தப் பிரச்சினை தான் அபாயகரமானதாக இருப்பதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.