Home நாடு ஜோகூர் மாநிலத்தில் இரண்டு மாபெரும் பொதுக் கூட்டங்கள் – முக்கிய அறிவிப்புகள்

ஜோகூர் மாநிலத்தில் இரண்டு மாபெரும் பொதுக் கூட்டங்கள் – முக்கிய அறிவிப்புகள்

1039
0
SHARE
Ad
ஜோகூர் மாநில மந்திரி பெசார் முகமட் காலிட் நோர்டின்

ஜோகூர் பாரு – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 18-ஆம் தேதி ஜோகூர் மாநிலத்தின் இருவேறு பகுதிகளில், தேசிய முன்னணியும், பக்காத்தான் கூட்டணியும் நடத்தப் போகும் தனித்தனியான மாபெரும் கூட்டங்களில் திரளான மக்கள் திரளுவார்கள் என்றும், சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் தனது 52-ஆம் ஆண்டு விழாவை எதிர்வரும் மார்ச் 18-ஆம் தேதி ஜசெக கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் பக்காத்தான் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் ஒன்றுகூடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வீ கா சியோங்

இதே நிகழ்ச்சியில் ஆயர் ஈத்தாம் தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளரின் பெயரையும் ஜசெக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் கடந்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் வெற்றிகரமாகத் தற்காத்து வரும் ஆயர் ஈத்தாம் தொகுதியில் இந்த முறை ஜசெகவின் ஜோகூர் மாநிலத் தலைவர் லியூ சின் தோங் போட்டியிடுவார் என்றும் அதற்கான அறிவிப்பு மார்ச் 18-ஆம் தேதியே வெளியிடப்படும் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

#TamilSchoolmychoice

60 விழுக்காடு மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆயர் ஈத்தாம் தொகுதியில் தேசிய முன்னணி, பக்காத்தான் என இரண்டு தரப்பிலும் சீன வேட்பாளர்கள் நிற்கப் போகும் பட்சத்தில், வாக்குகள் எந்தத் திசையில் செல்லும் என்பது இந்தத் தொகுதியில் எதிர்பார்க்கப்படும் சுவாரசியமாகும்.

லியூ சின் தோங்

ஜசெக போட்டியிடப் போகும் மற்ற தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களும் அன்றே அறிவிக்கப்படக் கூடும் என்ற ஊகங்களும் உலவுகின்றன.

பக்காத்தானின் முன்னணி தலைவர்கள் பலர் ஜோகூர் மாநிலத்தில் போட்டியில் குதிக்கப் போகின்றனர் என்பதால், வரும் பொதுத் தேர்தலில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் மாநிலமாக ஜோகூர் உருவெடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் ஜசெக சார்பிலும், நூருல் இசா பிகேஆர் கட்சி சார்பிலும் ஜோகூர் மாநிலத்தில் போட்டியிடுவார்கள் என்ற ஆரூடங்களும் வலுத்து வருகின்றன.

பாசீர் கூடாங்கில் மசீச நடத்தப்போகும் மாபெரும் கூட்டம்

அதே மார்ச் 18-ஆம் தேதி ஜோகூர் மாநிலத்தின் தென்கோடியில் இருக்கும் துறைமுக நகரான பாசீர் கூடாங்கில் உள்ள ஜோகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் மசீசவும் ஒரு மாபெரும் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தை நடத்துகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் ஜோகூர் ஜெயா தொகுதியை 1,460 வாக்குகள் வித்தியாசத்தில் ஜசெக வென்றது. கடந்த முறை இந்தத் தொகுதியை ஜசெகவிடம் பறிகொடுத்த மசீச இந்த முறை மீண்டும் வெல்ல தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது.

பாசீர் கூடாங் தொகுதியின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றங்களில் ஒன்று ஜோகூர் ஜெயா. மற்றொன்று பெர்மாஸ்.

கடந்த 2013 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 935 வாக்குகள் பெரும்பான்மையில் வென்ற பாசீர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியை இந்த முறை பக்காத்தான் கூட்டணி குறி வைத்திருக்கிறது.

ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பெர்மாஸ் சட்டமன்றத் தொகுதி இந்த பாசீர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது என்பது, பாசீர் கூடாங் தொகுதியில் ஏற்பட்டிருக்கும் பரபரப்புக்கும், உற்சாகத்துக்குமான மற்றொரு காரணமாகும்.

தனது பெர்மாஸ் சட்டமன்றத் தொகுதியில் ஜோகூர் மாநில மந்திரி பெசார் காலிட் நோர்டின் 2013-இல் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார்.

ஆனால் அதே சமயம் பாசீர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியில் வெறும் 935 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அங்கு போட்டியிட்ட அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் நோர்மலா பிந்தி அப்துல் சமாட் வெல்ல முடிந்தது.

இந்த முறை காலிட் நோர்டின் பெர்மாஸ் சட்டமன்றத்திற்குப் போட்டியிடும் அதே வேளையில் பாசீர் கூடாங் நாடாளுமன்ற வேட்பாளராகவும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் பாசீர் கூடாங்கில் பற்றி எரியும் அரசியல் பரபரப்புக்கான இன்னொரு காரணமாகும்.

கூலாய் தொகுதியில் மசீசவின் வேட்பாளர்

இதற்கிடையில் கூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் மசீசவின் சார்பில் தாங் நய் சூன் போட்டியிடுவார் என காலிட் நோர்டின் அறிவித்திருக்கிறார். தாங், கூலாய் மசீச தொகுதியின் தலைவருமாவார். தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் பெக்கான் நானாஸ் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக 2008-ஆம் ஆண்டு முதல் 2013 வரை பணியாற்றியிருக்கிறார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் மாநிலத்தின் பரபரப்பான பிரச்சாரப் பொதுக் கூட்டங்களை இரு அணிகளும் நிறைவு செய்யும்போது, வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போகும் சில முக்கிய வேட்பாளர்கள் யார் என்ற விவரங்களும் நமக்குத் தெரியவரும்.

-இரா.முத்தரசன்