Home நாடு ஆயர் ஈத்தாமில் வீ கா சியோங்கை எதிர்த்து ஜசெக லியூ சின் தோங் போட்டி

ஆயர் ஈத்தாமில் வீ கா சியோங்கை எதிர்த்து ஜசெக லியூ சின் தோங் போட்டி

1170
0
SHARE
Ad
லியூ சின் தோங்

ஜோகூர் பாரு – அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் ஜோகூர் மாநிலத்தின் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் மசீசவின் தேசியத் துணைத் தலைவரும், பிரதமர் துறை அமைச்சருமான வீ கா சியோங்கை எதிர்த்து ஜோகூர் ஜசெக தலைவர் லியூ சின் தோங் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பினாங்கு கடலடிப் பாதை விவகாரத்தில் லிம் குவான் எங்கை எதிர்த்து கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் வீ கா சியோங்கை அவரது ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியிலேயே தோற்கடிக்க ஜசெக மும்முரமாகப் பாடுபட்டு வருகிறது.

வீ கா சியோங்

ஜசெக தலைவர் லிம் கிட் சியாங்கே ஆயர் ஈத்தாமுக்கு வருகை தந்து, ஜசெகவின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தைத் திறந்து வைத்ததோடு, ஆயர் ஈத்தாமை பக்காத்தான் கூட்டணி கைப்பற்ற முடிந்தால், புத்ரா ஜெயாவின் மத்திய அரசாங்கத்தையே அதனால் கைப்பற்ற முடியும் என்பதற்கான அறிகுறி அது எனக் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

மசீச-ஜசெக என இரண்டு சீன வேட்பாளர்கள் மோதப் போகும் ஆயர் ஈத்தாம் தொகுதி மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி என்பதுதான் சுவாரசியமான தகவலாகும்.

ஆயர் ஈத்தாம் – இன ரீதியான வாக்காளர் விழுக்காட்டைக் காட்டும் வரைபடம்

2013 கணக்கெடுப்பின்படி 56 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்ட ஆயர் ஈத்தாமில் 38 விழுக்காட்டினர் சீன வாக்காளர்களாவர். 4 விழுக்காடு இந்திய வாக்காளர்கள்.

ஜோகூர் மாநில ஜசெக தலைவரான லியூ சின் தோங் ஆயர் ஈத்தாமில் போட்டியிட ஜசெகவின் தேர்தல் சிறப்புக் குழு பச்சைக் கொடி காட்டிவிட்டதாக ஜசெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட குளுவாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்து வரும் லியூ, மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆயர் ஈத்தாமுக்குத் தொகுதி மாறுவது அவருக்கு பெரும் சவாலாகும்.

ஆயர் ஈத்தாம் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

ஆயர் ஈத்தாம் தொகுதியில் பாஸ் கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மலாய் வாக்குகள் பிளவுபடும். அதனால் சாதகம் அடையப் போவது போவது தேசிய முன்னணியா, பக்காத்தானா என்பது ஒரு மிகப் பெரிய கேள்விக் குறியாகும்.

2004, 2008, 2013 என கடந்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் ஆயர் ஈத்தாம் தொகுதியில் வென்ற வீ கா சியோங் 2013-இல் 7,310 வாக்குகள் பெரும்பான்மையில் இந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொண்டார். ஆனால் கடந்த 3 பொதுத் தேர்தல்களிலும் அவரை எதிர்த்துக் களம் கண்டது பாஸ் கட்சியாகும்.

எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்குகள் இந்தக் கட்சிகளுக்குள் எவ்வாறு பிரியும் என்பது இன்னொரு சிக்கலான – சுவாரசியமான – அம்சமாகும்.

எதிர்வரும் மார்ச் 18-ஆம் தேதி ஆயர் ஈத்தாமிலுள்ள பக்காத்தான் தேர்தல் நடவடிக்கை மையத்தில் நடைபெறவிருக்கும் ஜசெகவின் 52-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் லியூ சின் தோங் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.