Home நாடு ஹிண்ட்ராப் 30 விழுக்காடு இந்திய வாக்குகளை பக்காத்தானுக்குத் திசை திருப்ப முடியுமா?

ஹிண்ட்ராப் 30 விழுக்காடு இந்திய வாக்குகளை பக்காத்தானுக்குத் திசை திருப்ப முடியுமா?

905
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இந்திய வாக்குகளைக் கவர்வதற்காக ஹிண்ட்ராப் அமைப்பும், நியூ ஜெனரேஷன் கட்சியும் வியூகப் பங்காளிகளாக இணைக்கப்படுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை மார்ச் 6-ஆம் தேதி பக்காத்தான் தலைவர் துன் மகாதீர் அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பை நேற்று புதன்கிழமை வரவேற்றிருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தனது இயக்கம் சுமார் 20 முதல் 30 விழுக்காடு வரையிலான இந்திய வாக்குகளை பக்காத்தானுக்கு ஆதரவாக திசை திருப்ப முடியும் என அறிவித்திருக்கிறார்.

ஆனால், இது சாத்தியமா? அல்லது வழக்கமான அரசியல் ஆர்ப்பாட்ட அறிக்கையா? உண்மையிலேயே எத்தனை விழுக்காடு வாக்குகளை ஹிண்ட்ராப் பக்காத்தானுக்கு ஆதரவாக திசை திருப்ப முடியும்?

#TamilSchoolmychoice

கொஞ்சம் ஆராய்வோம்!

ஹிண்ட்ராப் – நியூ ஜெனரேஷன் பலம் என்ன?

A.Rajarathnam
நியூ ஜெனரேஷன் கட்சித் தலைவர் ஏ.இராஜரத்தினம்

மகாதீர் அறிவித்த 2 கட்சிகளில் நியூ ஜெனரேஷன் புதிய கட்சி. அதன் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ஏ.இராஜரத்தினம் நீண்ட காலமாக இந்திய இயக்கங்களோடு இணைந்து, இந்திய சமூகத்துக்கானப் போராட்டக் களங்களில் பாடுபட்டவர். எனினும், எந்த அளவுக்கு அரசியல் ரீதியாக ஊடுருவி அவரோ அல்லது அவரது கட்சியோ இந்திய வாக்குகளைக் கவர முடியும் என்பதை இப்போதைக்கு யாராலும் கணிக்க முடியாது.

எனவே 2007 முதல் இந்தியர்களுக்கான அரசியல் – சமூக உரிமைகளுக்கான போராட்டக் களத்தில் நிற்கும் ஹிண்ட்ராப் வலிமை குறித்து மட்டும் முதலில் பார்ப்போம்.

ஹிண்ட்ராப்பை பிரபலமாக்கியது 2007-இல் நடந்த மாபெரும் பேரணி

ஹிண்ட்ராப்பின் தோற்றம் இன்றைக்கு பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. 2007-இல் அதன் மீது மக்களுக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் இன்றைக்கு இல்லை.

கால ஓட்டத்தில், ஹிண்ட்ராப் போராட்டவாதிகள், தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தது – பின்னர் வேதமூர்த்தியின் தனிமனித ஆதிக்கத்தின் கீழ் அந்த இயக்கம் செயல்பட்டது – குறிப்பிடத்தக்க ஹிண்ட்ராப் போராளியும், வேதமூர்த்தியின் சகோதரருமான பி.உதயகுமாரே ஹிண்ட்ராப்பிலிருந்து பிரிந்து விலகி நிற்பது – வசந்த குமார், கணபதி ராவ் போன்ற ஹிண்ட்ராப் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலிருந்த கைதிகள்  எதிர்க்கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டது – இப்படியாக அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு பல சம்பவங்களால் ஹிண்ட்ராப் சிதறுண்டு, சிதைந்து இன்றைக்குத் தனது பழைய பொலிவையும், வலிமையும் இழந்து நிற்கின்றது.

பி.உதயகுமார்

ஹிண்ட்ராப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன், ஒரு பிரிவினரை ஹிண்ட்ராப்பிலிருந்து பிரித்து, மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் கட்சி கண்டு, தேசிய முன்னணியோடு இணைந்து செயலாற்றி வருவதும், ஹிண்ட்ராப்புக்கு ஏற்பட்ட ஒரு பாதிப்புதான்.

வேதமூர்த்தி தலைமைக்கு எதிராகவும் ஒரு குழுவினர் சில மாதங்களுக்கு முன்னர் வேதமூர்த்திக்கு எதிராகக் கடும் கண்டனங்களுடன் ஹிண்ட்ராப்பிலிருந்து பிரிந்து சென்றனர்.

2013-இல் வேதமூர்த்தியின் திடீர் மன மாற்றம் – தேசிய முன்னணியில் இணைந்தது

எல்லாவற்றுக்கும் மேலாக, வேதமூர்த்தி அந்தர்பல்டி அடித்து 2013 பொதுத் தேர்தலில் எந்த தேசிய முன்னணியை எதிர்த்தாரோ – அதே தேசிய முன்னணிக்கு ஆதரவாக – நஜிப்பின் தலைமைத்துவதற்கு ஆதரவாக – பிரச்சாரங்களை மேற்கொண்டதும் ஹிண்ட்ராப் வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்பு அத்தியாயம்தான். அதன் காரணமாகவும் ஹிண்ட்ராப்பின் தோற்றம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதன் மீதான மதிப்பையும், மரியாதையையும் மக்கள் இழக்கத் தொடங்கினர்.

2013-இல் தேசிய முன்னணியுடன் உடன்பாடு கண்டு நஜிப்புடன் வேதமூர்த்தி இணைந்தார்…

அதே சமயத்தில் இன்னொரு கோணத்தில், அவ்வாறு தேசிய முன்னணியில் இணைந்தது – நஜிப்புடன் இந்தியர்களுக்கான சலுகைகளில் உடன்பாடு கையெழுத்தானது – அரசாங்கத்தில் துணையமைச்சரானது – போன்றவையெல்லாம் வேதமூர்த்தியின் தலைமைத்துவத்திற்குக் கிடைத்த மகத்தான சாதனைகளாகவும், அரசியல் வெற்றியாகவும் பார்க்கப்பட்டன. அதே பாதையில் உறுதியாக நின்று, தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து போராடி, தங்களின் உரிமை முழக்கங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருந்தால், ஹிண்ட்ராப் இன்று மிக வலிமையான அரசியல் கட்சியாக – ஏன் மஇகாவுக்கு ஒரு மாற்றாகக் கூட உருவெடுத்திருக்க முடியும் எனக் கருதும் அரசியல் பார்வையாளர்களும் உண்டு.

2013-இல் செனட்டராகப் பதவியேற்ற வேதமூர்த்தி, துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்

இப்போதோ, 2013 பொதுத் தேர்தலில் எந்த பக்காத்தான் கூட்டணி தங்களைப் புறக்கணித்தது என்றுகூறி தேசிய முன்னணியில் இணைந்தார்களோ, அதே பக்காத்தான் கூட்டணி 2018-இல் இனிக்கிறது என்று மீண்டும் அவர்களுடன் ஹிண்ட்ராப் இணைவது, காலத்திற்கேற்ற அரசியல் மாற்றம் என்று வைத்துக் கொண்டாலும், அதனை நம்பி இந்திய வாக்காளர்கள் திரண்டு வந்து ஆதரவு தருவார்கள் என நம்ப முடியாது.

காரணம், இந்த இடைப்பட்ட காலத்தில் – கிடைத்த இடைவெளியில் – இந்தியர்களுக்கான புளுபிரிண்ட் என்ற பெருவியூகத் திட்டம், தமிழ்ப் பள்ளிகள் மேம்பாடு, அரசாங்க சேவைகளிலும் கல்வி மையங்களிலும் இந்தியர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள், அமானா சாஹாம் பங்குகள் என பல்வேறு சலுகைகளையும், வாய்ப்புகளையும் வாரி வழங்கி பிரதமர் நஜிப், இந்திய சமுதாயத்தைக் கணிசமாகக் கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

23 ஏப்ரல் 2017-இல் மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் அறிமுகம்

எதையெல்லாம் வேதமூர்த்தி நஜிப்பைச் செய்யச் சொன்னாரோ அதையெல்லாம் பிரதமர் திட்டமிட்டு, கட்டம் கட்டமாக அமுல்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், மீண்டும் அவர் மீது குற்றங் குறைகளைச் சுமத்தி பக்காத்தானுடன் இணைவது வேதமூர்த்திக்கும், ஹிண்ட்ராப்புக்கும் செல்வாக்கை அதிகரிக்காது. இந்திய வாக்குகளையும் அதனால் திசை திருப்ப முடியாது.

மகாதீர்: அன்று கெட்டவர் இன்று நல்லவரா?

2007-இல் ஹிண்ட்ராப் போராட்டங்கள் வெடித்தபோது, அப்துல்லா படாவி பிரதமராக இருந்தாலும், ஹிண்ட்ராப் போராளிகளின் முக்கிய குற்றச்சாட்டுகளின் கதாநாயகனாகத் திகழ்ந்தவர் மகாதீர்தான். இன்று அதே மகாதீர்தான் தங்களின் ஆபத் பாண்டவர், அவரால்தான் மீண்டும் இந்திய சமுதாயம் வளம் பெறும் என்று கூறி ஹிண்ட்ராப் எந்த முகத்தோடு இந்திய வாக்காளர்களை அணுகி அவர்களின் மனதை மாற்ற முடியும் என்பது கேள்விக் குறிதான்!

அதிலும், ஹிண்ட்ராப்பை வியூகப் பங்காளியாகத்தான் இணைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களுக்கு பக்காத்தாத்தான் கூட்டணியில் எத்தகைய மரியாதை வழங்கப்படும் – போட்டியிடத் தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்பது போன்ற விவரங்கள் இனிமேல்தான் தெரியவரும்.

அதிலும் வேதமூர்த்திக்கும் – பிகேஆர், ஜசெக போன்ற பக்காத்தான் கூட்டணியில் உள்ள பினாங்கு முதல்வர் இராமசாமி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுக்கும் இடையில் தொடர்ந்து நிலவி வரும் கருத்து மோதல்களும் ஹிண்ட்ராப், பக்காத்தான் கூட்டணியில் சுதந்திரமாக, முறையாகச் செயல்பட முடியாத நிலைமைகளை உருவாக்கும்.

இத்தகைய சூழலில் 20 முதல் 30 விழுக்காடு வரையிலான இந்திய வாக்குகளை எங்களால் கொண்டு வர முடியும் என வேதமூர்த்தி சவால் விட்டிருப்பது, வெறும் அரசியல் ஆர்ப்பாட்ட அறிக்கையாகவே நாம் பார்க்க முடியும்.

இத்தனை முரண்பாடுகளோடு களத்தில் நிற்கும் ஹிண்ட்ராப்பை – அந்த இயக்கத்திற்காகவே – இத்தனை விழுக்காடு மக்கள் ஆதரிப்பார்கள் என்பதை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இருந்தாலும்…ஹிண்ட்ராப் வலிமையை குறைத்து மதிப்பிட முடியாது…

ஆனால் ஒன்று!

ஹிண்ட்ராப்பின் இணைப்பு என்பது பக்காத்தானைப் பொறுத்தவரை, இந்திய வாக்குகளைப் பெறும் அதன் முயற்சியில் ஒரு முக்கியமான – குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

பக்காத்தான் கூட்டணியில் இந்தியர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டை ஹிண்ட்ராப், நியூ ஜெனரேஷன் கட்சிகளின்  வரவும், இணைப்பும் மாற்றியுள்ளது.

2013-இல் தேசிய முன்னணியோடு ஹிண்ட்ராப் இணையும்போது, அதனை முரண்பாடாகப் பார்த்த இந்திய வாக்காளர்கள், இன்று ஆட்சி மாற்றத்திற்கு அறைகூவல் விடுக்கும் பக்காத்தானோடு ஹிண்ட்ராப் இணைவதை இயல்பான,  கால சூழலுக்கேற்ற பொருத்தமான, ஏற்றுக் கொள்ளக் கூடிய மாற்றமாகவேப் பார்ப்பார்கள் என சில தரப்புகள் கருதுகின்றன.

பல நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் ஹிண்ட்ராப் என்ற பெயருக்கென ஒரு செல்வாக்கும், வேதமூர்த்தி என்ற தனிமனித போராளியின் கடந்த காலப் போராட்டங்களுக்கு ஒரு மரியாதையும் இருப்பதை யாரும் குறைத்து மதிப்பிட்டு புறக்கணித்து விட முடியாது.

அதனைக் கொண்டு, வேதமூர்த்தியும், ஹிண்ட்ராப் அணியினரும் பொதுத் தேர்தலின்போது தீவிரப் பிரச்சாரங்களில் இறங்கும்போது, இந்தியர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் குறைந்தது 500 முதல் ஆயிரம் வாக்குகளை அவர்களால் திசை திருப்ப முடியும். பக்காத்தானுக்கு வாக்களிக்க இந்திய வாக்காளர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இத்தகைய குறைந்த பட்ச வெற்றியை அவர்கள் அடைய முடிந்தாலே, அது பக்காத்தானுக்கு மிகப் பெரிய சாதனையாக அமையக் கூடும்.

பாஸ் கட்சி பக்காத்தானுக்கு எதிராக மலாய் வாக்குகளைப் பிரிக்கும் நிலையில், கூடுதலாக சில நூறு இந்திய வாக்குகளையாவது ஹிண்ட்ராப் பக்காத்தானுக்குச் சாதகமாகக் கொண்டு வர முடிந்தால், அதன் மூலம் நெருக்கடியான, கடுமையான போராட்டங்களைக் காணப் போகும் பல நாடாளுமன்றத் தொகுதிகளில் பக்காத்தான் வெல்ல முடியும்.

மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தேசிய முன்னணி 31 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 59 சட்டமன்றத் தொகுதிகளிலும் வென்றது என்பதையும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவதும் பொருத்தமாக இருக்கும்.

எனவே, ஹிண்ட்ராப் சில நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் தங்களின் தீவிரப் பிரச்சாரத்தால் குறைந்தது ஐநூறு அல்லது ஆயிரம் இந்தியர் வாக்குகளையாவது தேசிய முன்னணிக்கு எதிராகவும், பக்காத்தானுக்கு ஆதரவாகவும் நிச்சயம் திசை திருப்ப முடியும்.

ஏற்கனவே, ஏறத்தாழ 50 விழுக்காடு வரையிலான இந்தியர்கள் பக்காத்தானுக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,

ஹிண்ட்ராப் சில தொகுதிகளில் 500 அல்லது 1000 இந்திய வாக்குகளை பக்காத்தானுக்கு ஆதரவாகத் திசை திருப்ப முடிந்தாலே  – அதனால், தேசிய முன்னணி பல தொகுதிகளில் பக்காத்தானிடம் தோல்வியடையும் நிலைமை ஏற்படும்.

-இரா.முத்தரசன்