Home நாடு ஆயர் ஈத்தாம்: ஜோகூர் அரசியல் போராட்டத்தின் மையமாக உருவெடுக்கிறது!

ஆயர் ஈத்தாம்: ஜோகூர் அரசியல் போராட்டத்தின் மையமாக உருவெடுக்கிறது!

1332
0
SHARE
Ad
Wee-Ka-Siong-MCA-Deputy President
டத்தோஸ்ரீ வீ கா சியோங் – மசீச துணைத் தலைவர், ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர்

ஆயர் ஈத்தாம் – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி தங்களின் முதன்மை மாநிலமாக – தாங்கள் தேசிய முன்னணியிடமிருந்து கைப்பற்றப் போகும் மாநிலமாகக் – குறிவைத்திருப்பது ஜோகூர் மாநிலத்தை!

அந்த ஜோகூர் மாநிலத்தில் தற்போது முதன்மை போராட்டத் தொகுதியாக உருவெடுத்திருக்கிறது ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதி.

liow-tiong-lai
டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய்

பகாங் மாநிலத்திலுள்ள பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய்யைத் தோற்கடிக்க வியூகம் வகுத்திருக்கும் ஜசெக, தனது அடுத்த இலக்காகக் குறி வைத்திருப்பது ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றம் தொகுதியை!

#TamilSchoolmychoice

காலம் காலமாக தேசிய முன்னணியின் கோட்டையாகக் கருதப்படும் ஆயர் ஈத்தாம் தொகுதியை மசீச துணைத் தலைவர் டத்தோ வீ கா சியோங் தற்காத்து வருகிறார். அண்மையக் காலமாக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கைக் குறிவைத்து, பினாங்கு சுரங்கப் பாதை விவகாரத்தில் வீ கா சியோங் கடுமையானத் தாக்குதல்களைத் தொடுத்து வருவதால், வீ கா சியோங்கை ஆயர் ஈத்தாமில் தோற்கடிக்க ஜசெக முனைப்புடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது.

பெந்தோங், ஆயர் ஈத்தாம் இரண்டு தொகுதிகளிலும், மசீசவின் தலைவர், துணைத் தலைவர் இருவரையும் ஒரே பொதுத் தேர்தலில் தோற்கடிக்கும் சாதனையை ஜசெக புரிந்து விட்டால் அதன்பின்னர் மசீசவின் நிலைமை என்னவாகும் என்பதை மேற்கொண்டு விவரிக்கத் தேவையில்லை.

ஆயர் ஈத்தாம் – தேசிய முன்னணியின் கோட்டை

Lim Kit Siang
லிம் கிட் சியாங்

இந்தத் தொகுதி 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி உடன்பாடுகளின்படி ஜசெகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆயர் ஈத்தாம் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பானின் பொதுத் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் “ஆயர் ஈத்தாம் தொகுதியை நாம் வெல்ல முடிந்தால் ஜோகூர் மாநிலத்தையும் வெல்ல முடியும். மத்திய அரசாங்கத்தையும் கைப்பற்ற முடியும்” என அறைகூவல் விடுத்திருக்கிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஆயர் ஈத்தாம் தொகுதியில் வீ கா சியோங் 7,310 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். அதற்குக் காரணம், ஜோகூர் பாரம்பரியமாக தேசிய முன்னணியின் கோட்டை என்பதோடு, இந்தத் தொகுதியில் உள்ள வாக்காளர்களின் சாதகமான இன ரீதியான விழுக்காடுதான்.

அதுமட்டுமல்ல! கடந்த 2013 பொதுத் தேர்தலில் வீ கா சியோங்கை எதிர்த்துப் போட்டியிட்டது பாஸ் கட்சியின் சின்னத்தில், பாஸ் ஆதரவாளர்கள் அணியைச் சேர்ந்த ஹூ பாங் சாவ். இவர் தற்போது அமானா கட்சியில் இணைந்துள்ளார். இந்த முறை பாஸ் கட்சி பக்காத்தான் கூட்டணியில் இல்லாத சூழ்நிலையில், ஜசெக நேரடியாக இந்தத் தொகுதியில் களமிறங்குகிறது.

ayer hitam-parliament-2013-election results
ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியின் 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

2013 புள்ளிவிவரங்களின்படி 42,913 வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் 56 விழுக்காடு மலாய் வாக்காளர்கள், சீன வாக்காளர்கள் 38 விழுக்காட்டினர். இந்தியர்கள் 4 விழுக்காடுதான்.

“ஆயர் ஈத்தாம் பக்காத்தான் வெல்வதற்கு சுலபமான தொகுதியல்ல. மிகவும் கடினம். ஆனால் இந்தத் தொகுதியில் வென்றுவிட்டால், அதன் பின்னர் ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றுவதோ, மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றுவதோ சுலபம். காரணம், தேசிய முன்னணிக்கு எதிராக கூடுதலான 10 விழுக்காடு மலாய் வாக்குகளும், 5 விழுக்காடு மலாய்க்காரர் அல்லாத வாக்குகளும் திசை திரும்பினால் தீபகற்ப மலேசியாவில் மட்டும் பக்காத்தான் 113 தொகுதிகளில் வெல்ல முடியும் என நான் ஏற்கனவே கணித்திருக்கிறேன். ஆனால், ஆயர் ஈத்தாம் தொகுதியில் நாம் வெல்ல, மலாய் வாக்குகள் 15 விழுக்காடும், மலாய்க்காரர் அல்லாத வாக்குகள் 10 விழுக்காடும் தேசிய முன்னணிக்கு எதிராகத் திரும்ப வேண்டும்” என லிம் கிட் சியாங் ஆயர் ஈத்தாம் தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவில் கூறியிருக்கிறார்.

அதே வேளையில் இங்கே போட்டியிட மலாய் வேட்பாளர் பொருத்தமாக இருப்பாரா அல்லது சீன வேட்பாளர் பொருத்தமாக இருப்பாரா – பக்காத்தான் கூட்டணியின் எந்த சின்னத்தில் போட்டியிட்டால் வாக்காளர்களின் அதிகபட்ச ஆதரவு கிடைக்கும் என்பது போன்ற ஆய்வுகளை பக்காத்தான் கூட்டணி தற்போது மேற்கொண்டு வருகிறது.

-இரா.முத்தரசன்