Home நாடு ஆயர் ஈத்தாம்: முதல் நட்சத்திரப் போட்டி அறிவிப்பு

ஆயர் ஈத்தாம்: முதல் நட்சத்திரப் போட்டி அறிவிப்பு

1104
0
SHARE
Ad

ஆயர் ஈத்தாம் – இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜோகூர் மாநிலத்தின் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியில், பலரும் எதிர்பார்த்தபடி ஜசெக-பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளராக ஜோகூர் மாநில ஜசெக தலைவர் லியூ சின் தோங் அறிவிக்கப்பட்டார்.

இவர் மசீச துணைத் தலைவரும் நடப்பு ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ கா சியோங்கை எதிர்த்துக் களமிறங்குகிறார்.

லியூ சின் தோங்கை ஆயர் ஈத்தாம் வேட்பாளராக அறிவிக்கும் லிம் குவான் எங்

இதனைத் தொடர்ந்து 14-வது பொதுத் தேர்தலில் முதலாவது நட்சத்திரப் போட்டியாளர்களின் தொகுதியாக ஆயர் ஈத்தாம் உருவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆயர் ஈத்தாமில் நடைபெற்ற ஜசெகவின் 52-வது ஆண்டு நிறைவு விழாவின்போது ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் லியூவின் வேட்புமனுவை அறிவித்தார்.

ஜோகூர் மாநிலத்தின் ஆயர் ஈத்தாம் தொகுதியை பக்காத்தான் ஹரப்பான் கைப்பற்ற முடிந்தால், அந்த வெற்றியின் மூலம் ஜோகூர் மாநில அரசாங்கத்தையும், மத்திய அரசாங்கத்தையும் பக்காத்தான் கைப்பற்ற முடியும் என ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஏற்கனவே கணித்திருக்கிறார்.

வீ கா சியோங் – ஆயர் ஈத்தாமின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 13 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஜசெக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முதல் கட்டமாக தனது நட்சத்திரத் தொகுதியாக ஆயர் ஈத்தாமை இன்று ஜசெக அறிவித்திருக்கிறது.

இதே ஜசெக ஆண்டு நிறைவு விழாவில் துன் மகாதீரும் கலந்து கொண்டதன் வழி மலேசிய அரசியலில் புதிய திருப்பமும், வரலாற்று மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது.

தனது அரசியல் வாழ்க்கையில் காலமெல்லாம் ஜசெகவுடன் எதிர்ப்பு அரசியல் நடத்திய மகாதீர் தற்போது ஜசெகவுடன்  கைகோர்த்திருக்கும் புதிய அரசியல் நிலைப்பாட்டின் அடையாளமாக இன்றைய ஜசெக ஆண்டு விழா திகழ்ந்தது.

ஆயர் ஈத்தாமில் ஜசெக வெல்ல முடியுமா?

கடந்த 2013 பொதுத் தேர்தலில் ஆயர் ஈத்தாம் தொகுதியில் வீ கா சியோங் 7,310 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். அதற்குக் காரணம், ஜோகூர் பாரம்பரியமாக தேசிய முன்னணியின் கோட்டை என்பதோடு, இந்தத் தொகுதியில் உள்ள வாக்காளர்களின் சாதகமான இன ரீதியான விழுக்காடுதான்.

2013-இல் தேசிய முன்னணி-மசீச சார்பில் போட்டியிட்ட வீ கா சியோங்கை எதிர்த்து அப்போது பக்காத்தான் கூட்டணியின் சார்பில் பாஸ் கட்சி போட்டியிட்டது. இந்த முறை பாஸ் போட்டியிடுமா என்பது இதுவரை தெரியவில்லை.

2013 புள்ளிவிவரங்களின்படி 42,913 வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் 56 விழுக்காடு மலாய் வாக்காளர்கள், சீன வாக்காளர்கள் 38 விழுக்காட்டினர். இந்தியர்கள் 4 விழுக்காடுதான்.