Home நாடு ஜோகூர் : நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 1 : பெர்லிங், மீண்டும் ஜசெக வசமாகுமா?

ஜோகூர் : நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 1 : பெர்லிங், மீண்டும் ஜசெக வசமாகுமா?

565
0
SHARE
Ad

(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 56 சட்டமன்றங்களில் சில தொகுதிகள் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளாக மாறியிருக்கின்றன. அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அந்தத் தொகுதிகளின் வரிசையில் ஜசெகவின் ஜோகூர் மாநிலத் தலைவர் லியூ சின் தோங் போட்டியிடும் பெர்லிங் தொகுதி குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

  • ஜசெக மாநிலத் தலைவர் லியூ சின் தோங் போட்டி
  • ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்
  • 2018-இல் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தவர் இந்த முறை சட்டமன்றத் தொகுதியில் வெல்வாரா?

2018 பொதுத் தேர்தலில் ஒட்டுமொத்த மலேசியர்களின் கவனத்தை ஈர்த்த நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று ஜோகூரிலுள்ள ஆயர் ஈத்தாம் தொகுதியாகும்.

லியூ சின் தோங்குடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் இங்குப் போட்டியிட்டது அதற்கான முக்கிய காரணம். அவரை வீழ்த்த ஜசெக சார்பில் நிறுத்தப்பட்டவர் ஜோகூர் மாநில ஜசெக தலைவர் லியூ சின் தோங்.

#TamilSchoolmychoice

ஆயர் ஈத்தாம் தொகுதியில் ஜசெக வெற்றி பெற்றால் மத்திய அரசாங்கத்தையும் கைப்பற்றும் அளவுக்கு நாடு தழுவிய வெற்றிகளை பக்காத்தான் ஹராப்பான்
கூட்டணி காணும் என முழக்கமிட்டார் ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங். அதற்கு அவர் கூறிய காரணம் அந்தத் தொகுதியின் இன விழுக்காடு ஒட்டு
மொத்த மலேசியாவையும் பிரதிபலிப்பது போல் இருக்கிறது என்பதாகும்.

ஆனால், அவரின் கணிப்பு பலிக்கவில்லை. அந்தப் போட்டியில் வீ கா சியோங் 303 வாக்குகளில் வெற்றி பெற்றார்.

இருப்பினும், லிம் கிட் சியாங்கின் இன்னொரு கணிப்பு நடந்தேறியது. பக்காத்தான் ஹராப்பான் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றும் என்னும்
கணிப்புதான் அது.

தோல்வி அடைந்தும் துணை அமைச்சரான லியூ சின் தோங்

ஜசெகவின் அடுத்த கட்டத் தலைவர்களில் முக்கியமானவராகப் பார்க்கப்படுபவர்
லியூ சின் தோங்.

பிரச்சாரத்திற்கு இடையில் இந்து ஆலயத்தில் வழிபாடு

ஆயர் ஈத்தாம் தொகுதியில் வீ கா சியோங்கை வீழ்த்துவதில் அவர் தோல்வி கண்டாலும் பாக்காத்தான் ஹராப்பான் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றியதால் செனட்டராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்காப்பு துறை துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

2020ஆம் ஆண்டில் ஆட்சி மாற, அவரின் அரசியல் அதிர்ஷ்டம் ஒரு முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் நூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டார் அவர்.

ஜோகூர் தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் அவர்
தேர்ந்தெடுத்திருக்கும் சட்டமன்றத் தொகுதிதான் பெர்லிங். ஜசெகவின் சிந்தனாவாதி தலைவர்களில் ஒருவராகவும் பிரபலமானவராகவும் பார்க்கப்படும் லியூ போட்டியிடுவதால் அனைவரின் பார்வையும் பெர்லிங் பக்கம்
திரும்பியிருக்கிறது.

மூடா கட்சித் தலைவர் சைட் சாதிக்குடன் வேட்புமனுத்தாக்கல் செய்யும் லியூ

பெர்லிங் தொகுதியில் வாக்காளர்களில் ஒருவரான மூடா கட்சியின் தலைவர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான், லியூவின் வேட்பு மனுத்தாக்கல் பாரத்தில் முன்மொழிபவராகக் கையெழுத்திட்டு, ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

வேட்பு மனுத்தாக்கலின்போதும் லியூவுடன் நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்திருக்கிறார் சைட் சாடிக்.

பூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றம்

பூலாய் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பெர்லிங். மற்றொன்று கெம்பாஸ். பூலாய் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக
இருப்பவர் அமானா கட்சியின் துணைத் தலைவரான சாலாஹூடின் அயூப்.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோவுடன்…

இது லியூவுக்கு சாதகமான ஓர் அம்சமாகத் திகழலாம். ஆனால், அதே சாலாஹூடின் அயூப் தனது நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தூரத்தில் உள்ள பாக்ரி நாடாளுமன்றத்தின் கீழ்வரும் சிம்பாங் ஜெரம் சட்டமன்றத்தில் போட்டியிடுகிறார். எனவே, லியூவுக்கு எந்த அளவுக்கு பிரச்சாரத்தில் உதவியாக இருப்பார் என்பது தெரியவில்லை.

கடந்த முறை 62,895 வாக்காளர்களைக் கொண்ட பெர்லிங் தொகுதியில், இந்த முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 101,263 ஆக அதிரடியாக உயர்ந்திருக்கிறது.

தானியங்கி வாக்காளர் பதிவு காரணமாக சுமார் 40 ஆயிரம் வாக்காளர்கள் இந்த தொகுதியில் அதிகரித்திருக்கின்றனர்.

இந்த புதிய வாக்காளர்களின் 7,859 பேர் 18 முதல் 20 வயது கொண்டவர்கள்.

மும்முனைப் போட்டி நிகழும் தொகுதி பெர்லிங்

ஜோகூர் இளவரசருடன் லியூ சின் தோங்

பெர்லிங் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தில் லியூ போட்டியிட, தேசிய முன்னணி வேட்பாளராக மசீசவின் சார்பில் டான் ஹியாங் கீ போட்டியிடுகிறார்.

பெரிக்காத்தான் நேஷனல் கட்சி கூ ஷியாவ் லீ என்பவரை கெராக்கான் சார்பில் களமிறக்கியுள்ளது.

2018 பொதுத் தேர்தலில் ஜசெக இந்தத் தொகுதியை 19,533 வாக்குகள் பெரும்பான்மையில் கைப்பற்றியது.

எனவே, இந்த முறையும் அத்தகைய சூழ்நிலை ஜசெகவுக்கு சாதகமாக இருப்பதாக கணிக்கப்படுகிறது.

அதிலும் கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர் அதிகம் பிரபலம் இல்லாதவர். இந்த முறை போட்டியிடும் லியூ ஜசெகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்.

ஜசெகவின் அந்தோணி லோக்குடன்…

புதிதாக இணைந்திருக்கும் 40 ஆயிரம் வாக்காளர்கள் எந்தப் பக்கம் சாய்வார்கள் என்பதைப் பொறுத்துதான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.

2018 கணக்கெடுப்பின்படி 44 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும் 44 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 11 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் 1 விழுக்காடு மற்ற வாக்காளர்களையும் கொண்டது பெர்லிங்.

புதிதாக சேர்ந்திருக்கும் 40 ஆயிரம் வாக்காளர்கள் குறித்த விழுக்காட்டு விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

2018 பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட பாஸ் 5,890 வாக்குகளைப் பெற்றது. இந்த முறையும் பெரிக்காத்தான் நேஷனல் மூலமாக கணிசமான மலாய் வாக்குகள் பிளவு படலாம்.

அதை வைத்துப் பார்க்கும்போது, ஜசெகவின் லியூ பெர்லிங் தொகுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை வாக்குகள் வித்தியாசம் என்பதுதான் கேள்வி!

-இரா.முத்தரசன்