1967ஆம் ஆண்டில் மார்ச் 6ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றார் பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை. அனைவராலும் சுருக்கமாக அண்ணா என அழைக்கப்பட்டவர்.
30 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை தமிழ் நாட்டில் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தவர். வீதிகள்தோறும் – ஊர்கள்தோறும் சளைக்காமல் சுற்றுப் பயணம் செய்து
தனது மேடைப் பேச்சு உரைகளாலும் அதன் மூலம் புகுத்திய தமிழ் உணர்வாலும் மக்களைக் கவர்ந்தவர். அதனால் ‘நாவால் நாடாண்டவர்’ என்ற அடைமொழியைப்
பெற்றவர்.
கல்வியாளர்களையும் – இன்னொரு பக்கம் அதிகம் படிக்காவிட்டாலும் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர்களையும் – அடுத்தக் கட்டத் தலைவர்களாக
உருவாக்கியவர்.
படித்தவர்களுக்கு உதாரணம், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், போன்றவர்கள் என்றால், பள்ளிக் கல்வி அதிகம் பெறாமல், உழைப்பையும் திறனையும் திமுகவுக்கு பங்களிப்பாக வழங்கியவர்களின் பட்டியலில் முதலிடம் கலைஞர் கருணாநிதிக்கு!
வளர்த்துவிட்டவர் அண்ணா .
திமுக ஆட்சியைப் பிடித்ததற்கான காரணங்கள்
1967ஆம் ஆண்டில் திமுக ஆட்சியைப் பிடித்ததற்கு இரண்டு முக்கிய காரணங்களைக் குறிப்பிடுவார்கள். முதலாவது 1965ஆம் ஆண்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தியதால் தமிழர்களுக்கு திமுக
மேல் ஏற்பட்ட மதிப்பும் மரியாதையும்!
வெளிநாட்டுத் தமிழர்களிடமும் ஆழமாக வேரூன்றியது, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களினால்தான்!.
அடுத்த காரணம் எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலை.
காங்கிரஸிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதில் அண்ணா வெற்றி கண்டதும் திமுகவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.
அண்ணா முதல்வராவதில் எழுந்த சிக்கல்…
இருந்தாலும், அந்த சிக்கல்களை முறியடித்து அண்ணா முதலமைச்சராகப் பதவி ஏற்றது எப்படி என்று பார்ப்போம்.
முதன் முதலில் 1957ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
1967 சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது, திமுக வெற்றி பெறும் – ஆட்சி அமைக்கும் – என அண்ணாவே நினைக்கவில்லை என அந்த காலகட்ட அரசியல் சூழல் குறித்து எழுதிய பலர் தெரிவித்திருக்கின்றனர்.
அதன் காரணமாகவோ என்னவோ திமுக தலைவரான அண்ணா அந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.
ஆனால், எதிர்பாராத விதமாக திமுக, பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மாநில அரசாங்கத்தையும் கைப்பற்றியது.
சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அண்ணாதுரை முதலமைச்சராவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
இல்லை.
சட்டமன்ற உறுப்பினராக இல்லாதவரும் முதலமைச்சர் ஆகலாம். ஆனால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.
இந்த சட்ட வாய்ப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் 1967இல் அண்ணா தமிழக முதலமைச்சராகி இருக்க முடியாது.
இந்திய அரசியலமைப்பு சட்டங்களின்படி ஒருவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்க முடியாது.
ஆனால், நமது மலேசியாவில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. அதனால் பலர் ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் செயல்படுகின்றனர்.
எம்எல்சி எனப்படும் மேலவை, நியமன உறுப்பினர்களால் ஆனதாகும்.
எம்எல்சி பதவியில் அண்ணா பின்னர் நியமிக்கப்பட்டார். அதன் காரணமாகவே, முதலமைச்சராகவும் தொடர்ந்தார்.
பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் அந்த சட்டமன்ற மேலவை நடைமுறை ரத்து செய்யப்பட்டது.
இன்றைய நிலையில் அன்று அண்ணாதுரைக்கு நிகழ்ந்தது போன்ற சம்பவம் மீண்டும் நிகழுமானால் அவ்வாறு முதலமைச்சராக நியமிக்கப்படுபவர் சட்டமன்ற இடைத்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுதான் முதலமைச்சராக முடியும்.
அவர் விதைத்த திராவிட ஆட்சி விதை, இன்றுவரை யாராலும் வீழ்த்த முடியாத ஆல விருட்சமாக பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது.
காலவோட்டத்தில் தமிழக அரசியல், திமுக– அதிமுக என இரு கிளைகளாகப் பிளவுபட்டாலும் கருணாநிதி– எம்.ஜி.ஆர். என்ற இரண்டு ஆளுமைகளின் கீழ் அணி பிரிந்து நின்றாலும் – அந்த இரண்டு தரப்புகளுமே திராவிட ஆட்சியின்
தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் பார்க்கப்பட்டன. அண்ணாவின் வாரிசுக் கட்சிகளாகத்தான் அந்த இரண்டு கட்சிகளும் இன்றுவரை மக்களால்
பார்க்கப்படுகின்றன.