Home நாடு “சாதனைகளோடு சரித்திரம் படைக்கும் பெண்களுக்கு உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்” – சரவணன்

“சாதனைகளோடு சரித்திரம் படைக்கும் பெண்களுக்கு உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்” – சரவணன்

565
0
SHARE
Ad

மார்ச் 8-ஆம் தேதி கொண்டாடப்படும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் துணைத் தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

சாதனைகளோடு சரித்திரம் படைக்கும் அனைத்து பெண்களுக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்

சாதனைகளோடு சரித்திரம் படைக்கும் அனைத்து பெண்களுக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள். மார்ச் 8-ஆம் தேதி ஆண்டுதோறும், சர்வதேசப் பெண்கள் தினம் அனைவராலும் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. ஆம் கொண்டாடப் பட வேண்டியவர்கள்தான் பெண்கள். தாயாக, தமக்கையாக, மனைவியாக, மகளாகத், தோழியாகப் பல அவதாரங்களில் நம் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்த ஓர் உறவு.

இன்றைய பெண்களின் நிலை, சுதந்திரம் யாவும் பல நூற்றாண்டுகளாக பல போராட்டங்கள், தியாகங்களின் அடிப்படையில் கிடைக்கப் பெற்றது.

#TamilSchoolmychoice

வீட்டின் சமையலறையில் மட்டுமே குடிகொண்டிருந்த பெண்கள் இன்று விண்ணில் பறந்தும்,  விண்வெளிக்குச் சென்றும் வருகிறார்கள். எனவே பெண் சுதந்திரம், பெண்கள் முன்னேற்றம் என்பதை நாம் தினம் தினம் கண்டு வருகிறோம்.

ஆனால் பலரும் போராடிப் பெற்ற பெண்களுக்கான இந்த சுதந்திரம், முன்னேற்றம் என்பது வெறும் வீட்டிலிருந்து பெண்கள் வெளியில் வருவதற்கான வாய்ப்பு மட்டும் கிடையாது. பெண்கள் சாதனை படைக்கவும், சரித்திரம் படைக்கவும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

வரப்புயர நீர் உயரும்,
நீர் உயர நெல் உயரும்,
நெல் உயரக் குடி உயரும்,
குடி உயரக் கோல் உயரும்,
கோல் உயரக் கோன் உயரும்

என்ற ஒளவையின் வரிகள், இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கும் பொருந்தும். ஒரு பெண்ணின் வளர்ச்சி அவள் சார்ந்த குடும்பம், சமூகம், அவள் வாழும் நாடு என்று அவளைச் சுற்றி வலம் வரும் அனைத்தையும், அனைவரையும் உயர்த்தும்.

அதற்கான வலுவும், தன்னம்பிக்கையும், தைரியமும் இயற்கையாகவே பெண்களுக்கு உண்டு. ஆண்கள் உடல் வலிமை அதிகம் பெற்றிருந்தாலும், பெண்களின் மனவலிமை ஆண்களைவிட பல மடங்கு அதிகம். இதைச் சரியான, தெளிவான, நேர்த்தியான முறையில் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்கள் சவால் மிக்க காலங்களாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கடந்த 2 வருடங்களாக இதுவரை காணாத ஓர் உலகத்தை நாம் கண்டோம். இனி பழைய வாழ்க்கைத் திரும்புமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

கொரோனா காலகட்டத்தில், பல ஆண்டுகளாக நாம் தொலைத்திருந்த தமிழனின் வாழ்க்கை முறைகளைப், உணவுகளைப், பழக்க வழக்கங்களை நாம் மீண்டும் திரும்பிப் பார்த்தோம். அதேபோல் சேமிப்பின் அவசியத்தையும் உணர்ந்தோம்.

ஆக அடுத்து என்ன காத்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். தொழில்புரட்சி 4.0, இன்று இருக்கும் பல வேலை வாய்ப்புகளையும், உலக நடைமுறைகளையும் காணாமல் அடிக்கும் சாத்தியம் கொண்டது. அதனைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

பாரதியின் வரிகளை நினைவில் கொண்டு, எதிர்வரும் காலத்தைத் தைரியமாய் எதிர்கொள்வோம். மீண்டும் உலகில் வாழும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

– பாரதியார்

 

அன்புடன்,

டத்தோஸ்ரீ எம்.சரவணன்

மனிதவள அமைச்சர்

ம.இ.கா தேசியத் துணைத் தலைவர்