Home உலகம் 104 மில்லியன் சுவிஸ் பிராங்க் மலேசியாவுக்கு திருப்பித் தரப்படாது

104 மில்லியன் சுவிஸ் பிராங்க் மலேசியாவுக்கு திருப்பித் தரப்படாது

1185
0
SHARE
Ad
சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம்

பெர்ன் – 1எம்டிபியின் மூலம் முறைகேடான முறையில் ஈட்டப்பட்ட பணம் என்று நம்பப்படும் 104 மில்லியன் சுவிஸ் பிராங்க் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் சுமார் 430 மில்லியன்) பணத்தைக் கைப்பற்றிய சுவிட்சர்லாந்து அரசாங்கம் அந்தப் பணத்தை மலேசிய மக்களுக்கு திருப்பித் தர வேண்டுமென சுவிட்சர்லாந்து நாட்டின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

நேற்று வியாழக்கிழமை கூடிய சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம், கார்லோ சொம்மருகா (Carlo Sommaruga) என்ற நாடாளுமன்ற உறுப்பினர், மற்ற சில அரசு சார்பற்ற இயக்கங்களின் ஆதரவோடு கொண்ட வந்த இந்தத் தீர்மானத்தை நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட அந்தப் பணத்தை சுவிஸ் அரசாங்கம் நடப்பு சட்டங்களின் அடிப்படையில் கையாளும்.

#TamilSchoolmychoice

சந்தேகத்துக்குரிய வகையில், முறைகேடாகப் பெறப்பட்டது என நம்பப்படும் பணம் சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டால், அந்தப் பணம் பொதுவாக அந்த நாட்டில் அரசாங்கக் கணக்கில் சேர்க்கப்படும்.

1எம்டிபி மூலம் 4.5 பில்லியன் ரிங்கிட் முறைகேடான பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகக் குற்றம் சாட்டியிருக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் நீதித் துறை அதன் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

‘இக்குனாமிட்டி’ ஆடம்பர உல்லாசப் படகு

1எம்டிபி விவகாரத்தில் சிக்கித் தலைமறைவாக இருந்து வரும் ஜோ லோ என்ற வணிகருக்கு உரிமையானது என்று நம்பப்படும் இக்குனாமிட்டி என்ற ஆடம்பர உல்லாசப் படகை அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வு துறை (எப்.பி.ஐ) அண்மையில் பாலித் தீவு அருகே இந்தோனிசிய அதிகாரிகளின் உதவியுடன் கைப்பற்றியது.

1எம்டிபி குறித்து சிங்கப்பூர் உள்ளிட்ட மேலும் 6 நாடுகளில் புலனாய்வுகளும், நீதிமன்ற விசாரணைகளும் நடைபெற்றிருக்கின்றன – அல்லது நடைபெற்று வருகின்றன.

“அந்தப் பணத்திற்கு நாங்கள் உரிமை கோரப்போவதில்லை” – 1 எம்டிபி

இதற்கிடையில் புதன்கிழமை (மார்ச் 14) இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட 1எம்டிபி நிறுவனம் சுவிட்சர்லாந்தில் கைப்பற்றப்பட்டு அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் 104 மில்லியன் சுவிஸ் பிராங்க் நிதி, தங்களுடையது அல்ல என்று விளக்கமளித்திருக்கிறது.

சுவிஸ் வங்கிகளுக்கும், சுவிஸ் அரசாங்கத்திற்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக தான் இந்த பறிமுதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் 1எம்டிபி குறிப்பிட்டிருக்கிறது.

“எனவே, 104 மில்லியன் சுவிஸ் பிராங்க் நிதியை சம்பந்தப்பட்ட வங்கிகள் தான் திரும்பப் பெற வேண்டும். 1எம்டிபி நிறுவனமோ அல்லது மலேசிய அரசாங்கமோ அல்ல. அந்த நிதி 1எம்டிபிக்கு சொந்தமானது அல்ல” என்று 1எம்டிபி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.