சிட்னி – ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை இன்று சனிக்கிழமை காலை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சந்தித்தார்.
சிட்னியில் இன்று சனிக்கிழமை மதியம் ஆசியான் – ஆஸ்திரேலியா சிறப்பு மாநாடு 2018 துவங்குகிறது. அதனை முன்னிட்டு, அதில் கலந்து கொள்வதற்காக சிட்னி சென்ற நஜிப், டர்ன்புல்லைச் சந்தித்தார்.
இச்சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இரு தலைவர்களும் தற்காப்பு, கல்வி, வர்த்தகம் மற்றும் நிதி ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் தீவிரவாதத்திற்கு எதிரான எல்லை ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே, நேற்று வெள்ளிக்கிழமை மலேசியாவின் முன்னாள் பிரதமரும், தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் எதிர்கட்சிக் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது, ஆஸ்திரேலியப் பிரதமர் டர்ன்புல், நஜிப்பைச் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.