சிங்கப்பூர் – 1998-ஆம் ஆண்டில் அப்போது துணைப் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது தந்தையின் முடிவால் சிறை சென்றபோது, அன்வாரின் குழந்தைகள் குறித்துத் தான் மிகவும் கவலைப்பட்டதாக மரினா மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் மகளான மரினா மகாதீர் சமூக சேவையிலும், ஏய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர். ஸ்டார் ஆங்கில நாளிதழில் தொடர்ந்து தனது கருத்துப்பதிவுகளின் மூலம் சிறந்த எழுத்தாளராகவும் பரிணமித்தவர்.
அண்மையில் சிங்கப்பூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்தபோது சேனஸ் நியூஸ் ஆசியா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில்தான் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார் மரினா மகாதீர்.
1981 முதல் 2003 வரை மகாதீர் பிரதமராக இருந்த காலத்திலும் பல அம்சங்களில் தனது தந்தையின் முடிவுகளுக்கு எதிராக துணிச்சலாக கருத்து தெரிவித்தவர் மரினா. எனினும் அப்போதெல்லாம் தனது தந்தையுடன் இணைந்து அரசியல் பணிகளில் அவர் ஈடுபட்டதில்லை.
ஆனால், தற்போது தனது 92-வது வயதில் தனது தந்தையார் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காலகட்டத்தில் அவருக்குத் துணையாக எல்லாக் கூட்டங்களுக்கும் செல்வதோடு, அவருக்குப் பக்கத் துணையாகவும் செயலாற்றி வருகிறார் மரினா.
1998-இல் அன்வார் இப்ராகிம் கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவங்களை சேனல் நியூஸ் ஆசியாவுடனான தனது பேட்டியில் நினைவு கூர்ந்த மரினா, தனது சொந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
1969-இல் தனது தந்தையார் அம்னோவிலிருந்து விலக்கப்பட்டபோது, தனக்கு 11 வயது என்றும் அப்போது “கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்” (expelled) என வெளிவந்த செய்திகளில் ‘விலக்கப்பட்டார்’ என்பதற்கான உண்மையான அர்த்தம் தனக்குத் தெரியாத காரணத்தால், தனது தந்தையார் சிறைக்கு அனுப்பப்படுவார் எனத் தான் அஞ்சியதாகவும், மிகவும் கவலைப்பட்டதாகவும், மரினா தெரிவித்திருக்கிறார்.
“அதே போன்று 1998-இல் அன்வார் கைது செய்யப்பட்டபோதும் அவரது குடும்பத்தினருக்காகவும், அவரது குழந்தைகளுக்காகவும் நான் கவலைப்பட்டேன். எனது சொந்த மகள் அன்வாரின் மகள் ஒருவருடன் ஒன்றாக பள்ளி சென்றார். அவர்கள் இருவருக்கும் ஒரே வயதுதான். அன்வார் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது மகள் வகுப்புக்குக்கு வந்ததாகவும், வகுப்பறையில் பின்னால் அமர்ந்து கொண்டு அந்த நாள் முழுக்க அழுததாகவும் எனது மகள் வந்து என்னிடம் தெரிவித்தார். இவையெல்லாம் மனிதர்களுக்கே உரிய உணர்ச்சிகள்” என்றும் மரினா தெரிவித்தார்.
இருந்தாலும் அந்த காலகட்டத்தில் தான் அன்வார் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் மரினா ஒப்புக் கொண்டிருக்கிறார்.
“அப்போதைய சூழ்நிலைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது நான் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பேன். அல்லது என்னை எதிர்த்து திட்டியும் இருப்பார்கள். அதனால் எனது உணர்ச்சிகள் எப்படியிருந்தாலும் நான் அன்வார் குடும்பத்துடன் தொடர்பு கொள்ளவில்லை” எனவும் மரினா குறிப்பிட்டிருக்கிறார்.