Home நாடு “ஐயை” உலகத் தமிழ் மகளிர் மாநாட்டில் முனைவர் முல்லைக்கு ‘தமிழ்ப் பேரொளி’ விருது

“ஐயை” உலகத் தமிழ் மகளிர் மாநாட்டில் முனைவர் முல்லைக்கு ‘தமிழ்ப் பேரொளி’ விருது

1527
0
SHARE
Ad
டத்தின் தாமரைச் செல்வி, முல்லை இராமையா, சரவணன்…

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை (17 மார்ச் 2018) ‘ஐயை’ உலக மகளிர் குழுமமும், மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகமும் இணைந்து மஇகா தலைமையகக் கட்டடத்தின் நேதாஜி மண்டபத்தில் நடத்திய முதல் ஐயை உலக மகளிர் மாநாட்டில், மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் இணைப் பேராசிரியரும், ‘டிஸ்லெக்சியா’ எனப்படும் மாணவர்களுக்கிடையிலான கற்றல் குறைபாடு துறையில் நீண்ட கால ஆய்வுகள் செய்து வந்திருப்பவருமான முனைவர் முல்லை இராமையாவுக்கு, ‘தமிழ்ப் பேரொளி’ சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உலகத் தமிழ் மகளிரை இணைக்கும் இயக்கமாக பல நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தை ஒரிசா பாலு தோற்றுவித்தார். ‘ஐயா’ என ஆண்கள் அழைக்கப்படுவதற்கு இணையாக மகளிரை ‘ஐயை’ என அழைக்கும் விதமாக இந்த மகளிர் குழுமத்திற்கு ஐயை எனப் பெயர் சூட்டப்பட்டதாக அந்த இயக்கத்தினர் தங்களின் பெயருக்கான விளக்கத்தைத் தந்திருக்கின்றனர்.

ஐயை குழுமத்தின் முதல் மாநாடு நேற்று மலேசியாவில் நேதாஜி மண்டபத்தில் நடந்தேறியபோது அதன் முதல் அங்கத்தில் கட்டுரைகள் படைக்கப்பட்டன. பின்னர் ஐயை விருதளிப்பு விழா மாலை 7 மணி முதல் இரவு 10 வரை நடைபெற்றது.

#TamilSchoolmychoice

உலகளாவிய அளவில் தமிழ்ப்பெண்களை – அவர்களின் தனித்திறமைகள் மற்றும் ஆற்றிக்கொண்டிருக்கும் சேவைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்து – ஐயை சிறப்பு விருதுகளும், மற்றவர்களுக்கு அவர்கள் துறை சார்ந்த விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, இந்தியா, இலங்கை, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து ஐயை குழுவினர் பேச்சாளர்களாகவும், கட்டுரைகளைப் படைக்கவும் விருதுகளைப்  பெறவும் வருகை தந்திருந்தனர்.

(வலமிருந்து) – இந்திரா மாணிக்கம், தங்கேஸ்வரி, ஜெர்மனி ஆய்வாளர் சுபாஷிணி,

இந்த நிகழ்ச்சி இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தலைமையிலும், பேராக் மாநில சபாநாயகர் தங்கேஸ்வரி முன்னிலையிலும், கெடா பிரமுகர் டத்தின் தாமரைச்செல்வி சுப்பிரமணியம் வரவேற்புரையுடனும் தொடங்கியது.

சிறப்பு ஐயை விருதுகள் பட்டியலின்படி, மலேசிய நாட்டைச் சேர்ந்த சபாநாயகர் தங்கேஸ்வரிக்கு (ஜான்சிராணி) விருதும், முனைவர் முல்லை ராமையாவுக்கு (தமிழ்ப் பேரொளி) விருதும், நாட்டியக் கலைஞர் தஞ்சை இந்திரா மாணிக்கத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

முனைவர் முல்லை உலகிலேயே முதன்முதலில் தமிழில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்காக ஒலிவழி கற்றல் முறையை உருவாக்கியமைக்காக இந்த ஐயை தமிழ்ப்பேரொளி விருதைப் பெற்றார்.

டிஸ்லெக்சியா என்பது ஒரு கற்றல் குறைபாடு. டிஸ்லெக்சியா உடையவர்களுக்கு வாசிப்பதிலும் எழுதுவதிலும் மிகுந்த சிரமம் இருக்கும். ஒலி வழி (phonics) கற்பித்தல் முறையில் பாடங்கள் மிக நுணுக்கமாக, அறிவியல் பூர்வமாக, திட்டமிட்டு தயாரிக்கப் பட்டுள்ளதாலும் டிஸ்லெக்சியா உள்ள பிள்ளைகளிடம் உள்ள மற்ற குறைபாடுகளையும் அறிந்து ஆவன செய்யப்பட்டுள்ளதாலும் அவரது உருவாக்கத்தில் உருவான இந்த ஒலிவழிப்பேழை பாராட்டப்பட்டது.

தமிழ்ப் பள்ளிகளுக்கு வரும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தமிழ் எழுத்தறிவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு, உருவாக்கப்பட்ட  இவரது இக்கற்றல் முறை மலேசியா சிங்கப்பூர், தமிழ்நாடு ஆகிய நாடுகளில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அணுகுமுறையால் பாதியில் படிப்பைக் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மலேசியா உள்பட பல நாட்டினர் தங்கள் துறைகளுக்காக இதே ஐயை நிகழ்ச்சியில் விருதுகள் பெற்றனர்.

வழக்கம்போல் தனது தலைமையுரையை இலக்கிய உவமைகளோடும், கவிஞர் கண்ணதாசன் கவிதைகளோடும், தமிழ் மொழியின் மேற்கோள்களோடும் சிறப்பான முறையில் டத்தோ சரவணன் வழங்கினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக ஐயை குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் ஒரிசா பாலு அவர்களுக்கு ஐயை பீஷ்மாச்சாரியார் விருது வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.