Home நாடு “பிரதமராகும் தகுதி எனக்கு இப்போது இல்லை” – மனம் திறக்கும் முக்ரிஸ்!

“பிரதமராகும் தகுதி எனக்கு இப்போது இல்லை” – மனம் திறக்கும் முக்ரிஸ்!

727
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த 1999-ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில், அம்னோ தன்னை நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் வேட்பாளராகக் களமிறக்க முடிவு செய்த போது, அப்போது பிரதமராக இருந்த தனது தந்தை துன் டாக்டர் மகாதீர் முகமது, அதனை நிராகரித்ததாக, முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மலேசியாகினிக்கு முக்ரிஸ் மகாதீர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது:

“மலாக்காவின் நடப்பு ஆளுநர் முகமது கலீல் யாக்கோப், என்னை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராகக் களமிறக்க நினைத்தார். ‘தயாராக இரு. நான் உனது பெயரைச் சேர்க்கிறேன்’ என்று என்னிடம் கூறினார். அப்போது கலீல் அம்னோ பொதுச்செயலாளராக இருந்தார்”

#TamilSchoolmychoice

“ஆனால், அப்போது பிரதமராக இருந்த எனது தந்தை அதனை நிராகரித்துவிட்டதாக பின்னர் கலீல் என்னிடம் தெரிவித்தார். ‘யார் செய்த வேலை இது?’ என்று கூறி எனது பெயரை அவர் (மகாதீர்) நீக்கிவிட்டதாகவும் கலீல் தெரிவித்தார்.”

“அவர் (மகாதீர்) நினைத்திருந்தால் என்னைப் போட்டியிட அனுமதித்திருக்கலாம். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. காரணம், அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர்” என்று முக்ரிஸ் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “அப்படிப்பட்ட ஒரு தலைவர், என்னைப் பிரதமராக்க வேண்டும் என்பதற்காக தான், நடப்பு பிரதமர் நஜிப்பைப் பகைத்துக் கொண்டு, அம்னோவில் இருந்து விலகி, புதிய கட்சி தொடங்கி, அன்வார் மற்றும் வான் அசிசா, லிம் கிட் சியாங், மாட் சாபுவுடன் இணைந்து செயல்படுகிறாரா? அபத்தமாக இருக்கிறது” என்றும் முக்ரிஸ் கூறியிருக்கிறார்.

அதேவேளையில், “பிரதமர் பதவி என்பது அவ்வளவு எளிதல்ல என்று கூறும் முக்ரிஸ், 30 மில்லியன் மக்களின் சார்பில் ஒவ்வொரு நாளும் முடிவெடுக்க வேண்டும். அப்படி ஒரு மிகப் பெரிய பொறுப்பை ஏற்க இப்போது எனக்குத் தகுதியும் கிடையாது. நான் இரண்டரை ஆண்டுகள் மந்திரி பெசாராக இருந்திருக்கிறேன். திடீரென்று என்னால் பிரதமராக முடியாது” என்றும் முக்ரிஸ் குறிப்பிட்டிருக்கிறார்.