Home நாடு “பொங்கலுக்கு விடுமுறை” – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப மணிவண்ணனுக்கு நினைவுக் கடிதம்

“பொங்கலுக்கு விடுமுறை” – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப மணிவண்ணனுக்கு நினைவுக் கடிதம்

1910
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழர் பெருவிழா பொங்கல் அரசு விடுமுறை கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வலியுறுத்தி காப்பார் பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணனிடம் மலேசிய நாம் தமிழர் இயக்கம் “நினைவுக்கடிதம்” வழங்கியது .

மலேசிய தமிழர்களின் முதன்மை பண்டிகையான தமிழர் புத்தாண்டு-பொங்கல் திருவிழாவை அரசு விடுமுறையாக அறிவிக்கக் கோரி மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கலைமுகிலன் தலைமையிலான தமிழர் இயக்கங்கள் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணனிடம் நினைவுக்கடிதம் வழங்கின.

தமிழர் புத்தாண்டு பொங்கல் திருவிழா விடுமுறை கோரும் போராட்டம் – அது இன்றைய போராட்டமல்ல மாறாக, மலேசியாவில் 1980- ஆம் காலக்கட்டத்திலே தொடங்கிவிட்டது என்று கலைமுகிலன் தெரிவித்தார் .

#TamilSchoolmychoice

1980-ஆம் ஆண்டுகளின் காலகட்டங்களில் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும், ஜசெகவின் முக்கியத் தலைவராகவும் திகழ்ந்த மறைந்த அமரர் மக்கள் தொண்டர் வி.டேவிட் அவர்கள் நாடாளுமன்றத்திலே பொங்கல் விடுமுறைக்கு குரல் எழுப்பி கோரிக்கை விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, பல தமிழர் இயக்கங்களும் தொடர் முயற்சியை எடுத்துள்ளனர். குறிப்பாக மூதறிஞர் மணிவெள்ளையனார் தலைமையில் செயல்பட்ட மலேசிய தமிழ் பண்பாட்டு கழகம் , தமிழறிஞர் திருமாளவன் தலைமையில் இயங்கும் மலேசிய தமிழ் நெறி கழகம், மலேசிய திராவிட கழகம், மற்றும் பல தமிழறிஞர்கள் ஏற்பாட்டில் 6.1.2001 – முதல் பொங்கல் பரிந்துரை மாநாடு, 17.1.2004-இல் இரண்டாவது பொங்கல் பரிந்துரை மாநாடு, 30.9.2007-இல் மூன்றாவது பொங்கல் பரிந்துரை மாநாடு, 24.2.2013-இல் அனைத்துலக பொங்கல் மாநாடு – போன்ற மாநாடுகளை நடத்தியது மட்டுமின்றி, மலேசிய அரசிடம் பொங்கல் விடுமுறைக்கான கோரிக்கையையும் வழங்கியிருப்பதாக கலைமுகிலன் தெரிவித்தார்.

ஆகையினால் தமிழர் புத்தாண்டு பொங்கல் திருநாள் விடுமுறை கோரிக்கை, ஒரு நீண்ட கால மலேசியத் தமிழர்களின் போராட்டமும் தாகமும் கூட என்றார் .

அதனால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது இந்தத் தவணைக்கான இறுதி நாடாளுமன்றக் கூட்டமாக இருப்பதனால், இந்த நினைவுக் கடிதத்தை வழங்க தான் முன் வந்ததாக கலைமுகிலன் தெரிவித்தார்.

இதனிடையே , காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன் பேசுகையில், “பொங்கல் திருநாள் தமிழர்களின் பெருவிழா. ஒரு தமிழனாக நான் குரல் எழுப்புவேன். என்னுடன் மற்ற சக நாடாளுமன்ற  உறுப்பினர்களும் குரல் எழுப்புவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நினைவுக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில், மலேசிய நாம் தமிழர் இயக்கத்திலிருந்து பொன் ரங்கன் , பாலமுருகன் , செல்வகுமரன் , ஆதிரன் மலேசிய தமிழர் வாழ்வியல் நெறி இயக்கத்தின் தலைவர் கு.மு.துரை , தமிழர் ஒற்றுமை இயக்கத்தின் தலைவர் மகாதேவன் மற்றும் பல இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.