Home நாடு முன்கூட்டியே நாடாளுமன்ற மேலவை – ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைப்பா?

முன்கூட்டியே நாடாளுமன்ற மேலவை – ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைப்பா?

1104
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் மலேசிய நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்ற ஆரூடங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற மேலவையின் கூட்டம் (செனட்) முன்கூட்டியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் வந்த நாடாளுமன்ற அறிவிப்பின்படி எதிர்வரும் ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 30 வரை நாடாளுமன்ற மேலவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் 5-ஆம் தேதி தொடங்கிய நடப்பு மக்களவைக் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி நிறைவுறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

தற்போது ஒரு எதிர்பாராத மாற்றமாக எதிர்வரும் திங்கட்கிழமை மார்ச் 26-ஆம் தேதியே நாடாளுமன்ற மேலவை தொடங்கப்பட்டு, மக்களவை கூட்டத்தோடு இணைந்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து மக்களவையும், நாடாளுமன்ற மேலவையும் ஒருசேர ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு அந்த இரு அவைகளும் ஏப்ரல் 5-ஆம் தேதி தங்களின் கூட்டங்களை நிறைவு செய்யும்.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ஆம் தேதிக்குப் பின்னர் நாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம் என்ற ஆரூடம் மேலும் வலுத்துள்ளது.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் அரசாங்கத்தின் மூலம் கூடுதலாக 7.12 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைக் கோரும் கூடுதல் வரவு செலவுத் திட்ட மசோதா முன்மொழியப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக இயற்றப்பட நாடாளுமன்ற மேலவையின் அங்கீகாரம் தேவை. இதன் காரணமாகவே, நாடாளுமன்ற மேலவை திங்கட்கிழமை முதல் கூட்டப்படுகிறது.

இந்த வாரத்தில் தொகுதி எல்லை மாற்றங்கள் குறித்த திருத்தங்களும் சமர்ப்பிக்கப்படும். ஆனால் இந்தத் திருத்தங்களுக்கு நாடாளுமன்ற மேலவையின் அனுமதியோ, அங்கீகாரமோ தேவையில்லை.

இந்த சூழலில்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடத்தப்படுகின்றன. இரு அவைகளும் ஏப்ரல் 5-ஆம் தேதி முடிவுறும்.

அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அநேகமாக மே மாதம் 5-ஆம் தேதி 14-வது பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்வார் இப்ராகிமின் ஜூன் மாத விடுதலை, நோன்புப் பெருநாள் தொடக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பொதுத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதி, அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என கணிக்கப்படுகிறது.