Home இந்தியா ஈராக்கில் தீவிரவாதிகளால் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது உறுதியானது!

ஈராக்கில் தீவிரவாதிகளால் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது உறுதியானது!

1436
0
SHARE
Ad

புதுடெல்லி – கடந்த 2014-ம் ஆண்டு, ஈராக் நாட்டின் மொசூல் நகரில், கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றி வந்த இந்தியப் பிரஜைகள் 39 பேர் திடீரென மாயமாகினர்.

அவர்களை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில், அவர்கள் அனைவரும் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது கண்டறியப்பட்டிருக்கிறது.

இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள் 39 பேரும் பணியாற்றி வந்த கட்டுமானத் தளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள படுஷ் என்ற கிராமத்தில், புதைகுழி ஒன்றில் இருந்து 39 சடலங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

அச்சடலங்களின் மரபணுக்கள், மாயமான 39 பேரின் மரபணுக்களுடன் ஒத்துப்போவது உறுதியானதையடுத்து, அவரது அனைவரும் கொல்லப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இதற்கு முன்பு வரை, அவர்களில் பலர் இன்னும் உயிரோடு இருக்கலாம் என இந்தியா நம்பி வந்தது. ஆனால் தற்போது சடலங்கள் அனைத்தும் கிடைத்திருப்பதையடுத்து, 39 பேரும் கொல்லப்பட்டுவிட்டது உறுதியாகியிருக்கிறது.

இந்த 39 பேருடன் சேர்ந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பஞ்சாப்பைச் சேர்ந்த ஹர்ஜித் மாசி என்பவர் மயிரிழையில் உயிர்தப்பி பல போராட்டங்களுக்குப் பின்னர் இந்தியா வந்தடைந்தார்.

அவர் கூறிய தகவலின் அடிப்படையில் தான் மாயமான 39 பேரும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது தெரியவந்தது.

அக்கொடூர சம்பவம் குறித்து ஹர்ஜித் இணையதளங்களுக்கு அளித்திருக்கும் பேட்டியில், தன்னுடன் சேர்த்து 39 பேரும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாகவும், ஒரு இடத்தில் கண்கள் கட்டப்பட்டு மண்டியிட வைக்கப்பட்டு சுடப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், தன்னை நோக்கி வந்த குண்டு உரசி சென்றதால், தனக்கு ஏதும் நடக்கவில்லை என்றும், தீவிரவாதிகள் அங்கிருந்து செல்லும் வரை தான் இறந்தது போல் நடித்ததாகவும் ஹர்ஜித் தெரிவித்திருக்கிறார்.

அதன் பின்னர், அங்கிருந்து தப்பித்து, பழகுடியினத் தலைவர் ஒருவரின் உதவியோடு ஈராக் இராணுவ எல்லைக்குச் சென்று அங்கிருந்து இந்தியத் தூதரகத்தை அடைந்ததாகவும் ஹர்ஜித் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டிருக்கும் 39 இந்தியர்களின் சடலங்களை இந்தியா கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருக்கிறார்.