யாங்கூன் – மியன்மார் நாட்டின் மக்கள் அதிபர் ஹிடின் கியாவ், ஓய்வு பெறும் நோக்கத்தில் தனது அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பதாக, அதிபர் அலுவலகம் இன்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது.
மேலும், அடுத்த 7 நாட்களில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் வரை, தற்போது இருக்கும் இரண்டு துணை அதிபர்களில் மூத்தவர், இடைக்கால அதிபராகப் பதவியேற்பார் என்றும் அதிபர் அலுவலகம் குறிப்பிட்டிருக்கிறது.
அதன் படி, இராணுவத்தால் நியமனம் செய்யப்பட்டிருக்கும் துணை அதிபரான மியிண்ட் சுவி, இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.
மியன்மாரைப் பொறுத்தவரையில் அதிபர் பதவி என்பது, அரசியலமைப்பின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பின்பற்றி நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும் தலைமை வகிப்பதாகும்.
எனினும், ஹிடின் கியாவின் பதவி சடங்கிற்காக மட்டும் இருந்து வந்தது. காரணம், கடந்த 2016-ம் ஆண்டு முதல் மியன்மார் நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சு கி செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.