Home நாடு “மீண்டும் சிகாமாட்டிலேயே போட்டி” – டாக்டர் சுப்ரா அறிவிப்பு

“மீண்டும் சிகாமாட்டிலேயே போட்டி” – டாக்டர் சுப்ரா அறிவிப்பு

1131
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஒருசில ஊடகங்கள் தெரிவித்ததுபோல் இறுதி நேரத்தில் தான் சிகாமாட்டிலிருந்து தொகுதி மாறப் போவதில்லை என்றும் எத்தனை கடுமையாகப் போட்டியை எதிர்நோக்கினாலும், மீண்டும் சிகாமாட்டிலேயே போட்டியிடப் போவதாகவும் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

“2004 முதல் நான் தற்காத்து வரும் தொகுதியை விட்டு நான் ஏன் மாறிச் செல்லவேண்டும்? இத்தனை ஆண்டுகளாக இந்தத் தொகுதிக்கு எனது சேவைகளை வழங்கி வந்திருக்கிறேன். அந்த அடிப்படையில் இங்கேயே நான் மீண்டும் போட்டியிடுவேன். அதே வேளையில் நான் சவாலையும் விரும்புபவன். எனவே, போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் தொகுதியை விட்டு விட்டு வேறு தொகுதிக்கு மாறிச் செல்லும் வழக்கம் கொண்டவன் நானில்லை” என்றும் அவர் பெர்னாமா ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.

பக்காத்தான் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சிகாமாட்டிற்கு இதுவரையில் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கான வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

சிகாமாட் நாடாளுமன்றம் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்
#TamilSchoolmychoice

சுமார் 47,000 வாக்காளர்களைக் கொண்ட சிகாமாட்டில் 46 விழுக்காடு சீன வாக்காளர்களும், 44 விழுக்காடு மலாய் வாக்காளர்களும், 10 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர்.

2004-ஆம் ஆண்டு முதல் கடந்த 3 தவணைகளாக டாக்டர் சுப்ரா தற்காத்து வரும் இந்தத் தொகுதியில் கடந்த 2013 பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சியின் சார்பில் டத்தோ சுவா ஜூய் மெங் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் 1,217 வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் சுப்ரா மீண்டும் வெற்றி பெற்றார்.

இந்த முறை ஜோகூர் மாநிலம் பக்காத்தான் கூட்டணியின் முதன்மை மாநிலமாக மிகவும் கடுமையானப் போட்டிகளை எதிர்நோக்கும் எனக் கூறப்படும் வேளையில், சிகாமாட் தொகுதியிலும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இதனால் பலர் நான் தொகுதியை விட்டுப் பாதுகாப்பான தொகுதிக்கு செல்வேன் என கணித்தார்கள். ஆனால் நான் அப்படி எண்ணவில்லை. இத்தனை ஆண்டுகாலமாக நான் சேவை செய்த தொகுதியை விட்டு நான் ஏன் மாறிச் செல்லவேண்டும்?” என்றும் டாக்டர் சுப்ரா கேள்வி எழுப்பினார்.

“சிகாமாட் தொகுதியில் மீண்டும் வெல்வது சவாலானது என்பதும் எனக்குத் தெரியும். அரசியல் பயணத்தில் இதுவும் ஒரு பகுதிதான். இங்கேயே சிகாமாட்டிலேயே இருந்து நான் போராடத் தீர்மானித்து விட்டேன். சிகாமாட்தான் எனது பொதுத் தேர்தலுக்கான போராட்டக் களமாக இருக்கும். இந்தத் தொகுதியில் நான் இதுவரை ஆற்றி வந்திருக்கும் சேவையின் அடிப்படையில் எனது வெற்றியும் அமையும் என நம்புகிறேன். சிகாமாட் வாக்காளர்களின் ஆதரவும் எனக்கு நிறையவே இருக்கிறது” என்றும் டாக்டர் சுப்ரா நம்பிக்கை தெரிவித்தார்.