Home நாடு “முகமட் ஹசானின் உரை குண்டர் கும்பலைக் குறிக்கவில்லை” – கேவியஸ்

“முகமட் ஹசானின் உரை குண்டர் கும்பலைக் குறிக்கவில்லை” – கேவியஸ்

988
0
SHARE
Ad
டான்ஸ்ரீ எம்.கேவியஸ்

கோலாலம்பூர் – “நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் ஆற்றல் வாய்ந்த தலைவர். அமைதியாக இருந்தாலும், செயலாற்றல் மிக்கவர். இயற்கையாகவே அமைதியும் சேவை மனப்பான்மையும் கொண்டவர். பொதுத் தேர்தலில் ‘போர் குணம்’ அவசியம் என அவர் கூறியதை இவ்வாறு திரித்துப் பேசுவார்கள் என நானும் சரி, பிறரும் சரி எதிர்ப்பார்க்கவில்லை. அவர் கூறிய ‘போர்’ குணமானது குண்டர் கும்பல் கலாச்சாரத்தைக் குறிக்கவில்லை. மாறாக தேர்தலுக்கான முன்னேற்பாட்டையும் தயார்நிலையையுமே குறிப்பிட்டது. இது முழுக்க முழுக்க அன்றைய தினம் கூடியிருந்தவர்களிடையே தன்னம்பிக்கையை விதைக்கக் கூறப்பட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார்.

“தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘போர்’ எனும் சொல் அனைத்துக் கட்சிகளாலும் பயன்படுத்தப்படுகின்றது. போர் என்ற இந்த வார்த்தையானது நாம் எதிர்நோக்கும் இன்னல்கள் முறியடித்து வெற்றியை அடைவதற்கான ஓர் உற்சாகத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும். இதன் வழி, இளைஞர்களிடையே கடுமையாக உழைக்கக் கூடிய குணத்தை ஏற்படுத்த முடியும். இதைத் தவிர்த்து இந்த வார்த்தையில் வேறெந்த உள்ளர்த்தமும் இல்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.

“பொதுவாக, அரசியல் பிரச்சாரங்களின்போது, ‘இறுதிவரை போராடுவோம்’ (fight till the end) என்ற கூற்றை உபயோகிப்பது போலவே ‘போர்’ எனும் வார்த்தையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ‘இறுதிவரை போராடுவோம்’ என்றால், ஆயுதங்களை ஏந்தி ஒருவரை ஒருவர் தாக்குவதாக அர்த்தப்படாது அல்லவா? இவ்விடத்தில் அக்கூற்றானது வெவ்வேறு கொள்கை கொண்ட அரசியல் தலைவர்களுக்கு இடையில் ஏற்படும் தேர்தலுக்கான விவாதம் என்றே பொருள்படுகிறது” என்றும் கேவியஸ் விளக்கினார்.

#TamilSchoolmychoice

முகமட் ஹசானின் சிந்தனையிலும் சரி, அவருக்கு அருகில் இருந்த கைரியின் சிந்தனையிலும் சரி, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் சிந்தனையிலும் சரி, ஒருபோதும் வன்முறை இருக்கவில்லை. ஆனால், அங்குப் பேசப்பட்டதைத் திரித்துக் கூறி தவறான அர்த்தம் கற்பித்த செயல் முதிர்ச்சியற்ற அரசியலையும் அர்த்தமற்ற வாக்குவாதத்தையும் வெளிப்படுத்துகின்றது என்று டான்ஶ்ரீ கேவியஸ் ஓர் அறிக்கையின் வழி தெரிவித்தார்.

“ஒருவேளை அங்கு வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் முகமட் ஹசான் பேசியிருந்தால், கூடியிருந்த இளைஞர்கள் அதற்கேற்ப செயல்பட்டிருப்பார்களே. ஆனால், அப்பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அவர்கள் அதனை நகைச்சுவையாகக் கருதி சிரித்துக் கொண்டு இருந்தனர். ஆகையால், முகமட் ஹசானின் பேச்சு வன்முறையைத் தூண்டவில்லை என்பது உறுதியாகின்றது. எனக்கு டத்தோஶ்ரீ முகமட் ஹசானை தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும். அரசியல் லாபத்திற்காக சர்ச்சையாக்கப்பட்ட அவரின் பேச்சை எந்தச் சூழலிலும் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்” என்றும் கேவியஸ் கேட்டுக் கொண்டார்.

“அரசியல் மொழியில் ‘போர்’ என்பது குடிமக்களை எதிர்க்கும் செயலைக் குறிக்கவில்லை. ஆகையால், அவரின் பேச்சையும் அந்தக் கூட்டத்தின் நோக்கத்தையும் குறுகிய சிந்தனையில் அணுகாதீர்கள்” என்றும் டான்ஶ்ரீ கேவியஸ் அறிவுறுத்தினார்.