கோலாலம்பூர் – இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும், நாடெங்கிலும் மொத்தம் 411 இடைநிலைப் பள்ளி மாணவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தியது பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சு இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (ஏஏடிகே) அதிகாரிகள் நடத்திய சோதனையில், 403 மாணவர்களின் சிறுநீரில் போதைப்பொருள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது என்றும், 8 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்ததன் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது என்றும் துணைக் கல்வி அமைச்சர் (2) சோங் சின் வூன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பெரும்பாலான சம்பவங்கள் பள்ளிக்கு வெளியே நடக்கின்றன. அதிக அச்சுறுத்தல் இருக்கும் குழுக்களை அடையாளம் கண்டறிந்து, ஏஏடிகே அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு சிறுநீர் பரிசோதனை நடத்துகிறோம்.
“பரிசோதனையில் அம்மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தால், ஏஏடிகேயுடன் இணைந்து அவர்களுக்கு 3 மாதங்கள் மறுவாழ்வுத் திட்ட ஆலோசனைகளை நடத்துகிறோம். பின்னர் அவர்களைக் கண்காணிக்கின்றோம்.
“ஒருவேளை அவர்கள் மீண்டும் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், மாவட்டக் கல்வி அலுவலக அளவில், உள்ள கமிட்டியிடம் இவ்விவகாரத்தைக் கொண்டு சென்று, அவர்கள் மூலமாக ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கின்றோம்” என்று சோங் சின் வூன் தெரிவித்திருக்கிறார்.