Home நாடு தேர்தல்-14 : சரவணனை எதிர்த்து பெர்சாத்துவின் ராய்ஸ் ஹூசேன்

தேர்தல்-14 : சரவணனை எதிர்த்து பெர்சாத்துவின் ராய்ஸ் ஹூசேன்

1111
0
SHARE
Ad

தாப்பா – மஇகா மீண்டும் வெல்லக் கூடிய சாதகமானத் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் தாப்பா நாடாளுமன்றத்தில் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை (படம்) எதிர்த்து பெர்சாத்து கட்சியின் சார்பில் ராய்ஸ் ஹூசேன் முகமட் அரிப் நிறுத்தப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராய்ஸ் பெர்சாத்து கட்சியின் கொள்கை மற்றும் வியூகப் பிரிவின் தலைவராவார்.

மலேசியாகினி இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில், ராய்ஸ், தான் போட்டியிடுவதை உறுதிப்படுத்தவில்லை. மாறாக, கட்சியின் தலைவர்களே தாப்பா வேட்பாளரை முடிவு செய்வர் என அவர் கூறினார். எனினும், கூடியவிரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராய்ஸ் ஹூசேன் முகமட் அரிப்
#TamilSchoolmychoice

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் எனது பெயர் அறிவிக்கப்பட்டால் நான் போட்டியிடத் தயாராக இருக்கிறேன். எல்லா மலேசியர்களுக்காகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்” என்றும் ராய்ஸ் கூறியிருக்கிறார்.

1986 முதல் மஇகா வேட்பாளர்கள் தேசிய முன்னணி சார்பாகத் தற்காத்து வந்திருக்கும் தாப்பா தொகுதியில் 2013 பொதுத் தேர்தலில் சரவணன் 7,927 வாக்குகள் வித்தியாசத்தில் பிகேஆர் கட்சியின் வசந்தகுமாரைத் தோற்கடித்தார்.

இந்த முறை தாப்பா பெர்சாத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தாப்பாவில் 2013 கணக்கெடுப்பின்படி 46 விழுக்காட்டினர் மலாய்க்கார வாக்காளர்களாவர். 28 விழுக்காடு சீன வாக்காளர்களையும், 13 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும், 13 விழுக்காடு மற்ற வாக்காளர்களையும் தாப்பா கொண்டுள்ளது.

2008 பொதுத் தேர்தலில் முதன் முறையாக தாப்பாவில் போட்டியிட்ட சரவணன், அப்போது சுழன்றடித்த சுனாமி அரசியல் தாக்கத்திலும் 3,020 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 2013 பொதுத் தேர்தலில் சரவணனின் பெரும்பான்மை 7,927 வாக்குகளாக உயர்ந்தது. மஇகா 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெல்லக் கூடிய வாய்ப்புடைய தொகுதிகளில் ஒன்றாக தாப்பா கருதப்படுகிறது.