Home நாடு “பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது” – ஸ்ரீராம் கூறுகிறார்

“பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது” – ஸ்ரீராம் கூறுகிறார்

1043
0
SHARE
Ad
வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம்

கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்ட மசோதா, நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, சட்டமாக்கப்பட்டால், அந்த சட்டம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணானதாகும் என கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள்  நீதிபதிகளில் ஒருவரான கோபால் ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிபதியாக ஓய்வு பெற்ற பின்னர் தற்போது வழக்கறிஞராகத் தொடர்ந்து பணியாற்றி வரும் ஸ்ரீராம், அந்த சட்டத்தை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டால், அதனை கூட்டரசு நீதிமன்றம் எப்படிக் கையாளும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று என்றும் கூறியிருக்கிறார்.

“இந்த சட்டம் தெளிவற்றதாகவும், அடிப்படைச் சட்டங்களுக்கு முரணானதாகவும் இருக்கிறது. அரசியல் சாசனத்தின் அடிப்படையான விதி 8(1) –க்கு முரண்பட்டதாக இந்த சட்டம் அமைந்திருக்கிறது. அனைவரும் சட்டத்தின் முன் சமம். சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் உரியது என சாசனத்தின் 8-வது விதி குறிப்பிடுகிறது” என ஸ்ரீராம் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“1998-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தொடர்பு மற்றும் பல்ஊடக சட்டத்தின்படி பொய்ச் செய்திகள் ஏற்கனவே குற்றமாக்கப்பட்டுள்ளன. அவதூறு சட்டங்களும் போதிய பாதுகாப்பை வழங்குகின்றன. எனவே, ஒவ்வொருவருக்கும் பேசுவதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும் கூட்டம் கூடுவதற்கும், அமைப்பு ரீதியாக செயல்படுவதற்கும் உரிமைகளை வழங்கும் சாசன விதி 10 (2) –க்கும் முரண்பட்ட வகையில் இந்த பொய்ச் செய்திகள் சட்டம் அமைந்திருக்கிறது” என்றும் ஸ்ரீராம் கருத்து தெரிவித்திருக்கிறார்.

எனினும் இது தனது கருத்து என்றும், வழக்கு தொடுக்கப்பட்டால் கூட்டரசு நீதிமன்றம் எவ்வாறு இந்த விவகாரத்தை அணுகும் என்பது குறித்து தன்னால் தெரிவிக்க இயலாது என்றும் அவர் மேலும் கூறினார்.

பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டத்தை வழக்கறிஞர் மன்றம், எதிர்க்கட்சிகள் என பலதரப்பட்ட மக்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.