கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், தாப்பா தொகுதியில் பெர்சாத்து கட்சியின் கொள்கை மற்றும் வியூகப் பிரிவின் தலைவர் ராய்ஸ் ஹூசைன் போட்டியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அவரைக் கண்டு கலக்கமடையவில்லை என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் கூறியிருக்கிறார்.
கடந்த இரண்டு தவணைகளாக தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று வரும் டத்தோ சரவணன், யார் சிறந்த தலைவர் வேட்பாளர் என்பதை தாப்பா தொகுதி வாக்காளர்களே தீர்மானிக்கட்டும் என மலேசியாகினியிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும், “அவருக்கு (ராய்ஸ்) எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும். நான் தாப்பா தொகுதி மக்களுக்கு நிறையவே செய்திருக்கிறேன். அவர்கள் தான் சிறந்த நீதிபதிகள். அதனால் அவர்களிடமே விட்டுவிடுகிறேன்” என்றும் சரவணன் தெரிவித்திருக்கிறார்.
2008 பொதுத் தேர்தலில் முதன் முறையாக தாப்பாவில் போட்டியிட்ட சரவணன், அப்போது சுழன்றடித்த சுனாமி அரசியல் தாக்கத்திலும் 3,020 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து 2013 பொதுத் தேர்தலில் சரவணனின் பெரும்பான்மை 7,927 வாக்குகளாக உயர்ந்தது. மஇகா 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெல்லக் கூடிய வாய்ப்புடைய தொகுதிகளில் ஒன்றாக தாப்பா கருதப்படுகிறது.