கோலாலம்பூர் – ரெண்டாங் சர்ச்சையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மலேசிய கேஎப்சி நிறுவனம், இன்று புதன்கிழமை வெளியிட்டிருக்கும் புதிய விளம்பரப் பதாகையில், “ரெண்டாங் அல்ல” என்ற தலைப்பில் பொறித்த கோழியின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது.
மேலும், “மொறுமொறுப்பு என்றால் அது கேஎப்சி சிக்கன் மட்டுமே, சமையல் கலைஞர் ஜாலேஹாவிற்கு பாராட்டுகள்” என்றும் கேஎஃப்சி குறிப்பிட்டிருக்கிறது.
மாஸ்டர் செஃப் யூகே நிகழ்ச்சியில், மலேசிய சமையல் கலைஞர் ஜாலே காதிர் ஆல்ஃபின் செய்த சிக்கன் ரெண்டாங் உணவை விமர்சித்த நடுவர்கள், கோழியின் தோல் பகுதி மொறுமொறுப்பாக இல்லையெனக் கூறினர்.
இதனால் ஜாலே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மலேசிய பாரம்பரிய உணவான ரெண்டாங்கில் கோழி மொறுமொறுப்பாக இருக்காது என மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கருத்துத் தெரிவிக்கும் அளவிற்கு இந்த விவகாரம் நட்பு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது குறித்துக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, நடுவர்களில் ஒருவர் ரெண்டாங்கையும், கேஎப்சி சிக்கனையும் குழப்பிக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
மகாதீர், கேஎப்சியை இந்த விவகாரத்தில் இழுத்ததும், அதனை கேஎப்சி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக விளம்பரம் செய்திருக்கிறது.
கேஎப்சியின் இந்த புதிய விளம்பரம் மலேசியர்கள் பலரையும் கவர்ந்திருப்பதோடு, மொறுமொறுப்பான கோழி கொண்ட ரெண்டாங்கை, நோன்புப் பெருநாளுக்குள் அறிமுகப்படுத்தும் படியும் கூறி வருகின்றனர்.